

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றுள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன தேர்வில் இருந்து முழுமையாக விலக்களித்து உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்கவேண்டும் என்பது உள்பட 9 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கடந்த 12-ம் தேதி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும்பட்டதாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கோடம்பாக்கம் மேம்பாலம் அருகேநேற்று முன்தினம் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த நிலையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நேற்று காலை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஈ.வெ.ரா.சாலை சிக்னல் சந்திப்பில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகம் நேரம் என்பதால் இந்த சாலை பரபரப்பானது.
சாலையின் இருபுறமும் நீண்டவரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீஸார் வாகனங்களை மாற்றுவழிகளில் திருப்பிவிட்டு போக்குவரத்து நெரிசலை சமாளித்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து அப்புறப்படுத்தினர். 45 நிமிடங்கள் நீடித்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோரிக்கை பரிசீலனை: இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், ‘‘பார்வையற்ற மாற்றுத் திறன் பட்டதாரிகள் தங்களுக்கு ஆசிரியர் பணிவழங்க வேண்டும் என்று கடந்த2012-ம் ஆண்டு முதலே கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தேர்வு இல்லாமல் அவர்களுக்கு ஆசிரியர் பணிவழங்குவது முடியாத காரியம். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் தற்போதும் பரிசீலிக்கப்படும்’’ என்றார்.