Published : 16 Feb 2024 06:25 AM
Last Updated : 16 Feb 2024 06:25 AM
பழநி: பழநி அருகே 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை கண்டறியப்பட்டுள்ளது. பழநி அருகே பொருந்தல் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி வழிகாட்டுதலின்படி, பழனியாண்டவர் மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் ஜெயந்திமாலா, பேராசிரியர்கள் தங்கம், ராஜேஸ்வரி தலைமையிலான மாணவிகள் கள ஆய்வுமேற்கொண்டனர். இதில், 1000ஆண்டுகள் பழமையான தடுப்பணை கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: சுருளி ஆறு, சண்முக நதியின்கிளை ஆறாகும். இதை சுள்ளியாறு என்றும் அழைக்கின்றனர். இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் பொருந்தல் ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, காட்டாறாக சிலகி.மீ. தொலைவு வடக்கு நோக்கிப்பாய்ந்து, பச்சையாற்றில் கலக்கிறது.
இடையில் இந்த சுருளி ஆறு சுண்டக்காய்தட்டி கரட்டுக்கு கிழக்கே பாய்கிறது. அந்த இடத்தில் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் கிழக்குக் கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு இந்த அணை கட்டப்பட்டிருந்ததை, அணையின் சிதைந்துபோன இடிபாடுகளில் இருந்து அறிய முடிகிறது.
ஆற்றின் கிழக்கு கரைநெடுகிலும் ஓரமாக தடுத்து, அணை கட்டியதன் மூலம் ஆறு நேராக வடக்கே 2 கி.மீ. தொலைவு பாய்ந்து, அம்மாபட்டியான் குளத்திலும், குமார சமுத்திரக்குளத்திலும் கலப்பதால் அப்பகுதி விளைநிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்துகிறது.
ஆற்றின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து 3 குளங்கள் இருப்பதால், ஆற்றில் வரும் மிகையான வெள்ளம்இந்த தடுப்பணையில் அமைக்கப்பட்ட மதகுகள் மூலம் 3 குளங்களையும் நிரப்பிவிட்டு, இறுதியாக சண்முகநதியில் கலக்கும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
காலப்போக்கில் காட்டாற்று வெள்ளம் தடுப்பணையையும், மதகுகளையும் உடைத்தெறிந்ததை அணையின் சிதைவுகளில் இருந்து அறிய முடிகிறது. ஏறக்குறைய 2 கி.மீ. தொலைவுக்குக் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, தற்போது வெறும் 50 மீட்டர் தொலைவு மட்டுமே காணப்படுகிறது.
இதை தடுப்பணை என்று சொல்வதைவிட, தடுப்புக் கரை என்று சொல்வதே பொருத்தமானது. இந்த தடுப்பணை மிகப் பெரிய பாறாங்கற்களைக் கொண்டும், செங்கற்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள் 10-ம்நூற்றாண்டு கட்டுமானங்களில் இடம் பெற்றிருப்பதால், தடுப்பணை கி.பி.10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.
இதன் மூலம், இந்த தடுப்பணை 1,000 ஆண்டுகள் பழமையானது என்பதை அறிய முடிகிறது. அணையின் மேற்புறம் காரைப் பூச்சு உள்ளது. பூச்சு விலகாமல் இருக்கவும், கரையின் மேற்புறப் பிடிமானத்துக்காகவும் இரும்பைக் காய்ச்சி ஊற்றிய தடயம் தென்படுகிறது. இது ஒரு புதுமையான கட்டுமான வகை எனலாம்.
இந்த தடுப்பணையின் மூலம் இப்பகுதியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வேளாண்மை, பாசனத் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT