Published : 16 Feb 2024 06:07 AM
Last Updated : 16 Feb 2024 06:07 AM

முதல்வரின் பதில் உரையை கவனித்திருந்தால் ட்ரில்லியன் டாலர் வளர்ச்சிக்கான உத்தி தெரிந்திருக்கும்: எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேரவையிலும், நேற்றுபேரவைக்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதும், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை விவரம், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்தி உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பல்வேறு கருத்துகளைத் தெரி வித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான ரகுபதி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு நிர்வாகம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கையை பொதுப் பார்வைக்கு வைக்கவேண்டியதில்லை என்பது முதல்வராக இருந்தவருக்குத் தெரியாதா? நீட் தேர்வு குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் போன்ற குழுக்களின் அறிக்கைகள் எல்லாம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

வெள்ளப் பாதிப்பு செலவினவிவரத்தை ஒரு மாதத்துக்குள்ளாக எப்படித் தர முடியும்? பல பணிகள் தொடர் செலவினமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, செலவு எவ்வளவு என்று முதல்வராக இருந்த ஒருவர் கேட்கிறார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வரின் பதில் உரையைக் கொஞ்சமாவது கவனித்திருந்தால், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் என்னென்ன என்பது அவருக்குத் தெரிந்திருக்கும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடம். தமிழகத்தின் பணவீக்கம் 5.97 சதவீதமாக குறைந்துவிட்டது. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்த தமிழகம் 3-வது இடத்துக்கு உயர்த்தப்பட்டது. இப்படி பட்டியல் போட்டு முதல்வர் சொல்லியிருக்கிறார். இவைதான் உத்திகள்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்காக அதிமுக எம்.பி.க்கள்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திப் பல நாட்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.

காவிரிக்காக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் உங்களிடம் கோரிக்கை வைத்தபோது, ‘‘ஆந்திரா பிரச்சினை வேறு. நமது கோரிக்கை வேறு’’ என பாஜகவுக்கு ஆதரவாகத்தானே பதில் சொன்னீர்கள்?

மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்றிய விவரத்தை 2022-ம்ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி இருக்கிறது. படிப்படியாக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும்.

சேது சமுத்திரத் திட்டம், நீட் தேர்வு ரத்து போன்றவை மத்தியஅரசின் கட்டுப்பாட்டியில் உள்ளவை. அங்கு இண்டியா கூட்டணி அமைந்தால்தான் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x