Published : 16 Feb 2024 05:45 AM
Last Updated : 16 Feb 2024 05:45 AM

கூட்டு மதிப்பு அடிப்படையிலான பதிவால் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோருக்கு பாதிப்பில்லை: பதிவுத் துறை செயலர் விளக்கம்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புக்கான கூட்டு மதிப்பு அடிப்படையில் பதிவு செய்வதால், வாங்குவோர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

பதிவுத்துறையால் கடந்தாண்டு டிச.1-ம் தேதி முதல், அடுக்குமாடி குடியிருப்புகள் கிரையப் பதிவுகள் தொடர்பாக, கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறித்து பதிவுத்துறை செயலர் வெளியிட்ட விளக்கம்:

கடந்தாண்டு டிச.1-ம் தேதிக்கு முன்வரை, அடுக்குமாடி குடியிருப்புகளின் பிரிக்கப்படாத அடிமனை பாகம் மட்டும் தனி கிரையஆவணமாகவும், கட்டுமான உடன்படிக்கை தனி ஆவணமாகவும் பதிவு செய்யப்பட்டு வந்தது.

பொதுமக்கள் அடுக்குமாடி குடியிருப்பை பிரிக்கப்படாத பாகஅடிமனை மற்றும் அதன் மேல் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டிடம் இரண்டையும் சேர்த்தே கிரையம் பெற்றாலும், கட்டிடத்தின் கிரையத்துக்காக அரசுக்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் 9 சதவீதத்தைத் தவிர்க்கும் ஒரே நோக்கில் அவர்கள் வாங்கும் கட்டிடம் கிரைய ஆவணமாக பதியப்படாமல் கட்டுமான உடன்படிக்கை ஆவணமாகவும், பிரிக்கப்படாத பாக அடிமனை மட்டும் கிரைய ஆவணமாகவும் தனித்தனியாக பதியப்பட்டு வந்தது.

இத்தகைய இரட்டைப் பதிவின்காரணமாக கட்டிடத்தைப் பொறுத்து அதனை வாங்குபவர்களுக்கு முழுமையாக சட்டப்பூர்வ உரிமை கிடைக்கப் பெறுவதில்லை. மேலும், கூட்டு மதிப்பு நடைமுறை அமலுக்கு வந்த டிச.1-ம் தேதிக்கு முன், பதிவான பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டிடங்களைப் பொறுத்தவரை அவை விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யப்படவில்லை.

இதனால் கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கியிருந்தாலும், கட்டிடங்களைப் பொறுத்து சட்டப்பூர்வமான முழுமையான உரிமைவாங்கியவர்களுக்கு இல்லாமலேயே இருந்து வருகிறது.

கட்டுமான உடன்படிக்கை ஆவணத்தை மட்டும் முன் ஆவணமாகக் கொண்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பை மறுகிரையம் செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு பதிவுத்துறையில் கடைபிடிக்கப்பட்டு வந்ததால் இதனை சாதகமாக்கிக் கொண்டு அரசுக்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வைமற்றும் பதிவுக் கட்டணத்தைக் குறைத்து செலுத்தும் ஒரே நோக்கில் கட்டிடத்துக்கு கிரைய ஆவணம் செய்யப்படாமல் கட்டுமான உடன்படிக்கை ஆவணமாகவே கட்டுமான நிறுவனத்தினரால் பதிவு செய்யப்பட்டு வந்தது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொறுத்து கூட்டு மதிப்பு நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் உள்ள கூட்டு மதிப்பு நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை முதன்முதலில் கட்டுமான நிறுவனங்களால்தான் தமிழக பதிவுத் துறைக்கு வைக்கப்பட்டது.

டிச.1 முதல் நடைமுறை: எனவேதான் பிரிக்கப்படாத பாக அடிமனை மற்றும் கட்டிடத்துக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே கிரைய ஆவணமாகவே பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை டிச.1-ம் தேதி முதல் கொண்டுவரப்பட்டது.

இந்த நடைமுறையால், அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோருக்கு பிரிக்கப்படாத பாக அடிமனை மற்றும் கட்டிடம் இரண்டின் மீதும் சட்டப்பூர்வ உரிமைகிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கூட்டு மதிப்பானது அந்தந்த பகுதிகளில் உள்ள நிலத்தின் உண்மையான சந்தை மதிப்பின் அடிப்படையில் முழுமையான விசாரணைக்குப் பின்னரே நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படுகிறது. இப்பதிவு முறை அமல்படுத்தப்பட்ட நிலையில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோருக்கு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நடைமுறை செயல்படுத்தப்பட்டதால் அவற்றை வாங்குவோர் பாதிக்கப்படுவதாக பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது.

இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின், கடந்த பிப்.13-ம் தேதி வரைகூட்டு மதிப்பின் அடிப்படையில் தமிழகத்தில் 1,988 கட்டுமான குடியிருப்பு விக்கிரைய ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x