

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர். இதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (டிச. 24) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜோதிபாஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சந்தியா நிவாஸ்டன் (33), கயூஸ் ராஜ் (44), ஜேம்ஸ் கேயிடண் (23), பிரபாத் (27), டோஜா (16), அந்தோணி டில்மன் (32), ஆக்போ நிஜோ (18), மரிய ஆண்டோ பெஸ்டன் (19), கோர்பசேவ் (35), மதன்சன் (32), நிமல் சகாயம் (31), ஆனந்த் (20) ஆகிய 12 மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 12 மீனவர்களையும் கைது செய்தனர்.
இதையடுத்து, ராமேசுவரத்தில் நேற்று மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மீனவர்களை சிறை பிடித்ததைக் கண்டித்தும், அவர்களை விடுவித்து, உடனடியாக தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதன்கிழமை (இன்று) ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர். மேலும், வரும் 26-ம் தேதி ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
படகிலிருந்த 12 மீனவர்கள் மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
தகவல் அறிந்து மீனவர்கள் 12 பேரையும் உடனடியாக படகுடன் விடுதலை செய்யக் கோரி மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடத்தில் மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் நேற்று மாலை ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் ராமேசுவரம் சரக ஏஎஸ்பி மீரா தலைமையில் போலீஸார் மற்றும் ஆர்.டி.ஓ. முஜிப்பூர் ரகுமான் ஆகியோர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர். அதன்பிறகு மீனவர்கள் குடும்பத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.
முதல்வர் கடிதம்: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும் நீண்ட கால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் இருந்து கடந்த டிச.22-ம் தேதி இயந்திர மீன்பிடிப் படகில் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று
சிறை பிடித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது தமிழக கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
எனவே, இந்த நீண்ட கால பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக் குழு அல்லது மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த 2024-ம் ஆண்டில் கைதான 18 மீனவர்கள் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 62 மீனவர்களும் இலங்கை அரசின் வசம் உள்ளனர். இலங்கை கடற்படையினரால் மேலும் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.