

கோப்புப் படம்
அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் உயர் கல்விக்காக செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருவதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இளநிலை தொழிற்படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் விடுதி மற்றும் போக்குவரத்து கட்டணங்களையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்த திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 36,419 பேர் பயன்பெறும் வகையில் ரூ.703 கோடி ஒதுக்கப்பட்டது.
கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவம் உட்பட பல்வேறு கல்லூரிகளில் படித்து வரும் 10 லட்சம் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ரூ.2,172 கோடியில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க முயற்சிகளை அரசு தொடர்ந்து ஊக்குவிப்பதன் மூலம் தமிழகம் மேலும் முன்னேறி இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் முன்னணி மாநிலமாக விளங்கும்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் உயர் கல்விக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் கல்விச் செலவுகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்மூலம் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டங்களுக்கு ரூ.1831 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 4,247 பள்ளி கட்டிடங்களின் கட்டுமானப் பணிக்கு ரூ.1359 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. விளையாட்டு வீரர்களின் உடற்திறனை பாதுகாப்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஆடுகளம் செயலி, டாக்டர் கலைஞர் விளையாட்டுத் தொ1குப்பு திட்டம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் என முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை செம்மஞ்சேரியில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொழிலாளர் நலத்துறை மூலம் நடத்தப்பட்ட 2,437 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 3 லட்சம் இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒரு லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் கடந்த 2022-23 முதல் தற்போது வரை ரூ.8,911 கோடி மதிப்பீட்டில் 20,484 கிலோ மீட்டர் நீளமுள்ள 15,412 சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் இதர நகர்ப்புற பகுதிகளில் ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 80,816 பேருக்கும், வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு திட்டங்களில் பட்டா நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு 1.42 லட்சம் பேருக்கும் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு கடந்த 2021 மே முதல் 2025 டிசம்பர் வரை 22.71 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.575 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொதுமக்கள் பங்களிப்புடன் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகளவில் பயன்பெறும் வகையில் மக்கள் பங்களிப்புத் தொகை மொத்த மதிப்பீட்டில் ஐந்தில் ஒரு பகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.