

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர் ராம ரவிக்குமார் தலைமையில் 10 பேர் மலைக்கு செல்வதற்கு தயாராக இருந்தனர். நீதிமன்ற உத்தரவு நகல்களை வழங்குமாறு போலீஸ் தரப்பில் கேட்டனர்.
மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் மற்றும் வழக்கறிஞர்கள் 4 பேர், சிஐஎஸ்எப் துணை கமாண்டன்ட் தலைமையில் 65 வீரர்கள் வந்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை வழங்கினர். மாநகர் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் முறையான ஆணை வேண்டும் என்றதால் காரசார வாக்கு வாதம் நடந்தது.
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி நேற்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. | உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இரவு திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மலையை நோக்கி செல்ல முயன்றவர்களை போலீஸார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. | தள்ளு முள்ளுவில் காயமடைந்த காவலர். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி |
இதில் மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனால் மலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என வழக்கறிஞர்களிடம் தெரிவித்தார்.
10 பேரை அனுமதிக்காவிட்டாலும், மனுதாரர் மற்றும் அவருடன் ஒருநபரை அனுமதிக் கலாம் என்றனர். இதற்கும் மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் மறுப்பு தெரிவித்தார். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் அடிக்கடி செல்போனில் தனியாகச் சென்று பேசினார்.
பின்னர் மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களிடம் வந்து பேசி அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், மலை மேல் செல்ல அனுமதிக்க முடி யாது என்றார். இதனால் மனுதாரர் வழக்கறிஞர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் ஆகி யோருக்கிடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அவர் சார்பில் துணை ஆணையர் இனிகோ திவ்யன் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மலை மேல் செல்ல அனுமதிக்க முடியாது என்றார்.
இவ்வாறு இருதரப்பிலும் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது. பின்னர், இருதரப்பினரும் சமரசமாக ஒரு முடிவெடுத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி சட்டப்பூர்வமாக மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம் என மனுதாரர் ராம ரவிக்குமார், மலை உச்சிக்கு செல்லும் பழனியாண்டவர் கோயில் தெருவில் சூடமேற்றி வழிபட அனுமதி கேட்டார்.
அதன்பின்னர் தெருமுனையில் சூடமேற்றி வழிபட்டார். நீதிமன்ற உத்தரவுப் படி சத்தியமாக மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவோம். இது சத்தியம், சத்தியம், சத்தியம் எனக் கூறினார். திருப்பரங்குன்றத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய பரபரப்பு இரவு 10 மணி வரை நீடித்தது.
பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு: திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை காரணம் காட்டி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பக்தர்கள் கூட்டமாக வரமுடியாத நிலை ஏற்படும். இதை அறியாமல் வரும் வெளியூர் ஐயப்ப பக்தர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
பக்தர்கள் போர்வையில் போராட்டம் நடத்த யாரும் திட்டமிட்டுவிடாதபடி பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் ஈடுபட போலீஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் கோயில் வளாகமே வெறிச்சோடி காணப்படும் நிலை உள்ளது. மேல் முறையீடு வழக்கில் நீதிமன்ற உத்தரவு, இந்து அமைப்புகளின் போராட்ட அறிவிப்பை பொறுத்தே நிலைமை மாற வாய்ப்புள்ளது.