

ராமநாதபுரம்: கடலாடி அருகே புற்று நோயால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவரின் சிகிச்சைக்கு தமிழக முதல்வர் உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமூர்த்தி. இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருடைய இளைய மகன் முனீஸ்வரன் ( 11 ) கடலாடி அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்புப் படிக்கிறார். இவர் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
இது குறித்து முனீஸ்வரனின் தாய் ராமலட்சுமி கூறியதாவது: எனது மகன் 2-ம் வகுப்பிலிருந்தே வயிற்று வலி எனக் கூறி வந்தான். நான் சாதாரணமாக இருக்கும் என மருத்துவரிடம் சென்று மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தேன். அடிக்கடி வயிற்று வலியால் இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் துடி துடித்தான். இந்நிலையில் மதுரையில் உள்ள இரு தனியார் மருத்துவ மனைகளில் பரிசோதனை செய்த போது நுரையீரல் புற்று நோய் இருப்பது தெரியவந்தது.
தற்போது வரை கடன் வாங்கி ரூ.10 லட்சம் வரை செலவு செய்து விட்டேன். இதற்கு மேல் செலவு செய்து சிகிச்சை அளிக்க முடியாமல் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன். நானும் எனது கணவரும் மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். எனவே தமிழக முதல்வர் எனது மகனைக் காப்பாற்ற உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.