

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மலைக் கிராமம் மரகேரிதொட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி முத்து. இவரது மனைவி பவளக்கொடி (24). இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலை யில் மீண்டும் கர்ப்பமான பவளக்கொடிக்கு, நேற்று அதிகாலை திடீரென இடுப்பு வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொண்டு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, தளி பகுதி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குமார் மற்றும் மருத்துவ உதவியாளா் சத்யாகுட்டி ஆகியோர் மரகேரிதொட்டி கிராமத்துக்குச் சென்றனர். அங்கு பவளக்கொடியை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு பாலதொட்டனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி வாகனம் சென்றது. ஆனால், வழியிலேயே பவளக்கொடிக்கு பிரசவ வலி அதிகரித்ததால், மருத்துவ உதவியாளர் வேனை நிறுத்தி பிரசவம் பார்த்தார். காலை 5.45 மணியளவில் பவளக்கொடிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து தாயும், சேயும் பாலதொட்டனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பவளக்கொடிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம், அவரது உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
108 ஆம்புலன்ஸ் கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமன் கூறும்போது, ‘‘தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகள் மலைக் கிராமங்கள் நிறைந்த பகுதி. இங்கு வசிக்கும் மக்களின் தேவைக்காக 108 ஆம்புலன்ஸ்கள் 4 இயக்கப்படுகின்றன.
ஆம்புலன்ஸில் உள்ள மருத் துவ உதவியாளர்களுக்கு பிரசவம், விபத்துகளில் சிக்குபவர்களைக் காப்பது குறித்து சென்னையில் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு பணி வழங்குகிறோம்’’ என்றார்.