Published : 15 Feb 2018 07:41 AM
Last Updated : 15 Feb 2018 07:41 AM

சென்னையில் களைகட்டிய காதலர் தினம்: கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தினர்

சென்னையில் காதலர் தினம் நேற்று களைகட்டியது. கடற்கரை, பூங்காக்கள், மால்கள் மற்றும் திரையரங்குகளில் காதலர்கள் திரண்டு கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் தங்களது அன்பை வெளிப்படுத்தி னர்.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பிப். 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையிலும் நேற்று காதலர் தினம் களைகட்டியது. மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிண்டி பூங்கா, செம்மொழி பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் மற்றும் மால்களில் காலை முதலே காதலர்கள் திரண்டனர். அவர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக காதல் பரிசுகள், ரோஜா பூக்கள் வழங்கி காதலைப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன், ஒருவருக்கொருவர் இனிப்புகள், சாக்லேட்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பூங்கா, கடற்கரையில் செல்ஃபி

ஒருசில ஜோடிகள் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை காதல் பரிசாக வழங்கி அன்பை வெளிப்படுத்தினார்கள். அதேபோல், காதலன் தனது காதலிக்கு பிடித்தமான ஆடையையும், காதலி தனது காதலனுக்கு பிடித்த ஆடையையும் அணிந்து வந்து பூங்காக்கள் மற்றும் கடற்கரையில் அமர்ந்து செல்ஃபி எடுத் துக் கொண்டனர். இதனால் மெரினா கடற்கரை மற்றும் பூங்காக்களில் காதல் ஜோடிகளால் கூட்டம் நிரம்பியது.

அதேபோல், சினிமா தியேட்டர்கள் மற்றும் ஷாப்பிங் மால்களில் காதலர்கள் அதிக அளவில் குவிந்தனர். குறிப்பாக, சென்னை சிட்டி சென்டர், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்பென்சர் பிளாசா, ஸ்கைவாக் உள்ளிட்ட மால்களிலும் காதலர்கள் ஜோடி, ஜோடியாக வந்து கேக் வெட்டி காதலர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைகளில் காதலர்கள் பைக் மற்றும் கார்களில் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்.

தீவிர கண்காணிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு தாம்பரத்தை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், பூங்காவுக்கு வந்த காதலர்களிடம், எல்லை மீறி நடந்துக் கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர். பூங்காவுக்குள் சென்ற காதலர்கள் ஒருவொருக்கொருவர் சாக்லேட், ரோஜாப் பூக்களைக் கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்தினர். காதலர்கள் எல்லை மீறுகிறார்களா என்பதை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x