உத்தமபாளையம் புறவழிச் சாலையில் விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளால் சிதைந்த பாதுகாப்பு கம்பங்கள்

உத்தமபாளையம் புறவழி சாலையோரம் சிதைந்து கிடக்கும் பாதுகாப்பு கம்பங்கள். படம்:என்.கணேஷ்ராஜ்.
உத்தமபாளையம் புறவழி சாலையோரம் சிதைந்து கிடக்கும் பாதுகாப்பு கம்பங்கள். படம்:என்.கணேஷ்ராஜ்.
Updated on
1 min read

உத்தமபாளையம்: உத்தமபாளையம் புறவழிச் சாலையில் திருப்பங்களில் வேகத்தை குறைத்து பயணிப்பது, வளைவுகளில் முந்தக்கூடாது போன்ற விதிமுறைகளை வாகனஓட்டிகள் மீறி வருகின்றனர். இதனால் ரப்பரினால் ஆன பாதுகாப்பு கம்பங்கள் வெகுவாய் சேதமாகி விட்டன.

திண்டுக்கல்-குமுளி இருவழிச்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட ஊர்களுக்குள் செல்லாமல் புறவழிச்சாலையிலே பயணிக்கும் வசதி கிடைத்தது. நகர நெரிசல் இல்லாததால் இச்சாலையில் வாகனங்களின் வேகமும் வெகுவாய் அதிகரித்தது. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக வளைவுகளில் வாகனங்கள் எதிரெதிரே மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் 3 அடி உயர ரப்பர் கம்பங்கள்(ஸ்பிரிங் போஸ்ட்) சாலையின் நடுவில் பொருத்தப்பட்டன. திருப்பங்களில் வரும் போது வலதுபுறம் வாகனங்கள் சென்று விடாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வைத்த சில வாரங்களிலே வாகனங்கள் மோதி இந்த இவை சேதமாகிவிட்டன.

இது குறித்து வாகனஓட்டிகள் கூறுகையில், "மையத்தடுப்பு குறித்த அறிவிப்புகள் இல்லை. இதனால் இந்நிலை ஏற்படுகிறது" என்றனர்.

போக்குவரத்துப் போலீஸார் கூறுகையில், "வளைவுகளில் வாகனங்கள் முந்தும் போது இந்த தடுப்பான்கள் சரிவர தெரியாது. கடைசி நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் வாகனங்கள் இதில் மோதி விடுகின்றன. வளைவில் முந்தக்கூடாது, திருப்பங்களில் வேகத்தை சற்று குறைக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு பலருக்கும் இருப்பதில்லை. ரப்பர் என்பதால் வாகனங்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படுவது இல்லை” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in