புதுச்சேரி புதிய சட்டப்பேரவை கட்டிடம்: ஆளுநர் தமிழிசையால் தாமதம் என பேரவைத் தலைவர் தகவல்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் | கோப்புப் படம்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: “புதிய சட்டப்பேரவை கட்டுவதற்கான கோப்பு 5 மாதங்களாக ஆளுநர் தமிழிசை ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது” என்று புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் கூறியுள்ளார். தற்போதைய பேரவைக் கட்டடம் ஓராண்டுதான் தாக்குப் பிடிக்கும் வகையில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் தனது அலுவலகத்தை மாற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுச்சேரி பேரவைத் தலைவர் அறை தற்போதைய சட்டப்பேரவை கட்டடத்தின் தரைத்தளத்தில் முதல்வர் அலுவலகம் அருகே இருந்தது. தற்போது புதிய கட்டடத்தின் நான்காவது மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் பழைய சட்டப்பேரவை வளாகம் பழுதடைந்து வருவதால் புதிய சட்டப்பேரவை கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பணிகள் செயல்பாடு இன்றியுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்திடம் கேட்டதற்கு, "புதுவையில் தற்போது இயங்கி வரும் சட்டப்பேரவை கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. தகுதி வாய்ந்ததாக இல்லை. பேரவையின் முன்பகுதி நிலத்தில் இறங்குகிறது. பராமரித்துதான் கூட்டத்தை நடத்துகிறோம். இதனால் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கு முன்பும் முழுமையாக பராமரித்து, அதன் பிறகு கூட்டத்தை நடத்தும் சூழல் உள்ளது. அதோடு சட்டப்பேரவையின் நிலையை கருத்தில் கொண்டுதான் நான் தரைத்தளத்தில் இல்லாமல், புதிய கட்டிடத்தின் 4-வது மாடியில் பேரவைத் தலைவர் அலுவலகத்தை மாற்றி அமைத்துள்ளோம்.

புதிய சட்டமன்றத்துக்கு மத்திய அரசும், பிரதமரும் ஒப்புதல் அளித்துவிட்டனர். விளக்கம் தந்து, இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஆளுநர் தமிழிசை ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 5 மாதங்களாக ஆளுநர் தமிழிசை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. எங்கள் பணியை முடித்து விட்டோம். துணை நிலை ஆளுநர் ஒப்புதல்தான் பாக்கியுள்ளது. அதற்கான காரணத்தை ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும். மத்திய அரசு தெரிவித்ததை நிறைவேற்றி உள்ளோம். அளவீடுகளில்தான் ஆளுநருக்கு சந்தேகம் உள்ளதாக தெரிகிறது.

எதிர்காலத்தை கருத்தில்கொண்டு வடிவமைத்தோம். அதிலும் சந்தேகம் கேட்டுள்ளார். இதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. இந்த பழைய கட்டிடம் அதிகபட்சமாக ஓராண்டுதான் தாக்குப் பிடிக்கும். முதல்வரிடமும் தெரிவித்துள்ளேன். இதனால் விரைவில் புதிய சட்டப்பேரவைக்கு பூமி பூஜை நடத்துவோம்" என்று புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in