ஜல்லிக்கட்டு காளை முட்டி உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு இழப்பீடு: முதல்வர் நிவாரண நிதியில் வழங்க பரிந்துரை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: விருதுநகர் காரியாபட்டியைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தமனுவில் கூறியிருப்பதாவது:

எனது மகன் முத்துமணிகண்டன்(30), கடந்த ஆண்டு மார்ச் 12-ல்தேனி அய்யம்பட்டியில் நடந்தஜல்லிக்கட்டுக்கு காளை உரிமையாளருடன் சென்றிருந்தார். ஜல்லிக்கட்டு முடிந்து வீடு திரும்ப வாகனத்துக்காகக் காத்திருந்தபோது, ஜல்லிக்கட்டு காளை முத்துமணிகண்டனை முட்டியது.

இதில் பலத்த காயமடைந்த முத்துமணிகண்டன், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். எனது மகன் இறப்புக்கு உரிய இழப்பீடு கோரி அரசிடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, எனது மகன் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்கவும், அதுவரை அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "ஜல்லிகட்டில் மாடுபிடி வீரர், காளைக்குமட்டுமே காப்பீடு செய்யப்படுகிறது. காளை உரிமையாளருடன் வந்தபோது, மனுதாரரின் மகன் உயிரிழந்துள்ளார். எனவே, அவருக்கு காப்பீடு கிடையாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், "ஜல்லிக்கட்டு நடத்துவது மாவட்டநிர்வாகம்தான். எனவே, போட்டியில் பங்கேற்கும் காளை, காளை உரிமையாளர், மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு பார்க்க, காளையுடன் வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். எனவே, அவரது குடும்பத்துக்கு ஏதாவது ஒரு வகையில் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து காளைமுட்டி உயிரிழந்த இளைஞருக்கு ஏன் இழப்பீடு வழங்கக்கூடாது? இது தொடர்பாக தேனி ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in