Published : 15 Feb 2024 05:59 AM
Last Updated : 15 Feb 2024 05:59 AM

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டி: முதல்வர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை தொடங்கிவைத்தார்.

இந்த திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை கடந்த ஆண்டு நவ. 25-ம் தேதி ஒப்புதல் அளித்தார். திட்டத் தொடக்க விழா, திருக்கனூர் அடுத்த காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மாலை நடைபெற்றது. கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.

திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கரோனாவுக்குப் பின்னர் வீட்டில்இருந்து பயிலும் சூழல் ஏற்பட்டதால், மாணவர்கள் செல்போன், மடிக்கணினியை பயன்படுத்தி படித்தனர். எனவே, அரசுப் பள்ளிகளில் பயிலும் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்.

கடந்த ஆண்டை பிரதமர் மோடி சிறுதானிய ஆண்டாக அறிவித்து, தொடர்ந்து சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறார். பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க சிறுதானியங்களை அவர்களுக்கு கொடுக்கலாம் என்று கருதி, இந்ததிட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.

மேலும், மடிக்கணினி மற்றும் புத்தகங்களை எடுத்துச் செல்லும் வகையில் ‘பேக்’ வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பேரவைத் தலைவர் செல்வம்,கல்வித் துறைச் செயலர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரே, இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

86 ஆயிரம் மாணவர்கள்: இந்த திட்டத்தில், அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வாரம் 2 நாட்கள் தினை,கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய 20 கிராம் அளவிலான பிஸ்கெட் மற்றும் மிட்டாய்கள் வழங்கப்படுகின்றன. 486 பள்ளிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 86 ஆயிரம் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x