

திருப்பூர்: அவிநாசி அருகே வேலாயுதம் பாளையத்தில் பாதையில் கிணறு மூடப்பட்டுள்ளதாக கூறி, அதனை தோண்டி திறக்கும் நூதன போராட்டத்தில் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள கருப்பசாமி, கன்னிமார் கோயில் பலருக்கும் குலதெய்வமாகும். கோயிலுக்கு அருகே பாதை அடைக்கப்பட்டுள்ளது. பாதையில் இருந்த பொதுக்கிணறு ஏற்கெனவே மூடப்பட்டுள்ளது. ஆகவே அந்த பொதுக்கிணற்றை நாங்கள் தோண்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஆக்கிரமித்ததாக கூறப்படும் நபர் கூறும்போது, ‘நீதிமன்ற உத்தரவுபடி பாதை எனக்கு சொந்தமானது’ என்றார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வருவாய் துறையின் 1990-ம் ஆண்டு பதிவேட்டை எடுத்து வந்து, கிணறு இல்லை என பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், 1990-ம் ஆண்டுக்கு முந்தைய பதிவேட்டில் கிணறு உள்ளது. ஆகவே அதனை காண்பித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதையடுத்து வருவாய் துறை மற்றும் போலீஸார் ஒருவார காலத்துக்குள் பொதுமக்கள் சொல்லிய பதிவேட்டை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.