

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட திம்மசந்திரம் பகுதியில் சாலை, குடிநீர், கால்வாய் வசதியின்றி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஓசூர் நகரைச் சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்து 45 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்ந்த நிலையில், பல வார்டுகளில் சாலை, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், திம்மசந்திரம் ஊராட்சி பகுதியிலிருந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஓசூர் மாநகராட்சியில் இணைக்கப்பட்டு 8-வது வார்டு பகுதியில் இக்குடியிருப்புகள் இடம் பெற்றுள்ளன. இங்கு எந்த அடிப்படை வசதியும் இதுவரை மாநகராட்சி மூலம் செய்து கொடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் குடியிருப்பு பகுதிகள் திம்மசந்திரம் ஊராட்சியின் கட்டுப் பாட்டில் இருந்த போது, எங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்தன. தற்போது, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர் அடிப்படை வசதியில் பின் தங்கியுள்ளது. குறிப்பாகச் சாக்கடை கழிவு நீர் கால்வாய் இல்லாததால் குடியிருப்புகளிலிருந்து வெளி யேறும் கழிவு நீர் தெருக்களில் வழிந் தோடுகிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படுகிறது.
கடந்த 6 மாதங்களாகச் சீரான குடிநீர் விநியோகம் இல்லை. தெரு விளக்கு எரிவதில்லை, மேலும், தெருக்களைப் பிரித்து தெருக்களுக்கு பெயர்கள் வைக்கவில்லை. இதனால், மலைக் கிராமத்தில் வசிப்பதைப் போன்று உணர்ந்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து, எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.