

சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் சமூக நலக் கூடத்தில் தங்கியிருக்கும் உண்மையான பயனாளிகள் என்று கண்டறியப்பட்ட 153 பேருக்காவது உடனடியாக வீடு கொடுங்கள் என்று அப்பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் கடந்த 2005-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்தவர்கள் தங்களின் உடமைகளை இழந்தனர். அவர்கள் அதே பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்த மான பாழடைந்த சமூக நலக் கூடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர். அவர் களுக்கு குடியிருப்புகள் கட்டித் தருவதாக அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், 9 ஆண்டுகள் ஆகியும் வீடு வழங்கப்படவில்லை. தற்போது அங்கு 173 குடும்பங்கள், எந்த அடிப்படை வசதியும் இன்றி வசித்து வருகின்றன.
கடந்த ஜூலை 10-ம் தேதி வீட்டு வசதித் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பேசும்போது, “மகாகவி பாரதி நகரில் வசித்து வரும் 153 பயனாளிகளுக்கு விரைவில் வீடு வழங்கப்படும்” என்று அறிவித்தார். இதுவரை வழங்கப்படவில்லை.
இது குறித்து மாநகராட்சியின் 4-வது மண்டல அதிகாரி ஒருவர் கூறும்போது, “அங்கு மொத்தம் 173 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைத்து குடும்பத் தலைவர்களின் பயோமெட்ரிக் அடையாளங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் உண்மையான பயனாளிகள் யார் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்படும்” என்றார்.
பயனாளிகளில் ஒருவரான காமாட்சி கூறும்போது, “அண்மைக் காலமாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், அருகில் உள்ள கட்டு மானப் பணி நடைபெறும் இடங் களில் தங்கி இரவுப் பொழுதை கழிக்கிறோம். அமைச்சர் அறிவித் தும் எங்களுக்கு வீடு வழங்கப் படாதது வருத்தம் அளிக்கிறது” என்றார்.
இது குறித்து பயனாளிகள் சார்பில் தேவை இயக்க ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறியதாவது: கடந்த 9 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதியும் இன்றி இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடத்தில் மாநகராட்சியின் கழிப்பறை மற்றும் குளியலறை வசதி இல்லை. டிஜிட்டல் பேனர்களைக் கொண்டு கூரை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு வசித்து வரும் 173 குடும்பங்களில் 20 குடும்பங்கள் போலியானது என்று அரசு கண்டுபிடித்திருப்பதாக கூறப்படுகிறது.
அது குறித்து மாநகராட்சி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அது ஒருபுறம் நடக்கட்டும். மழை காலம் தொடங்கிவிட்டதால் உண்மையான பயனாளிகள் என்று கண்டறியப்பட்டவர்களுக்காது உடனே வீடு வழங்கலாம். தற்போது வீடு வழங்கப்படாமல் இருப்பதற்கு மாநகராட்சியின் மெத்தனப் போக்குதான் காரணம். இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவித்து இருக்கிறோம் என்றார்.