கோயம்பேடு சந்தையின் சுற்றுச்சூழலை மேம்படுத்த திடக்கழிவு மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை
சென்னை: கோயம்பேடு சந்தையில் திடக்கழிவு மேலாண்மை மோசமான நிலையில் உள்ளது. கடைக்காரர்கள் குப்பையை நடந்து செல்லும் வழிகளில் கொட்டி வருகின்றனர். அதனால் அவற்றை முறையாக அகற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, அப்பகுதியின் தூய்மை கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் காய்கறிக் கழிவுகள்ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளதால், அவற்றை உண்பதற்காக ஏராளமான கால்நடைகளும் வளாகத்தில் சுற்றித் திரிகின்றன.
அங்குள்ள,குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனமும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இயங்கவில்லை. அதனால் மாநகராட்சியின்குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட திடக்கழிவுகள் மலைபோல் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் பேசும்போது, "ஆசியாவிலேயே மிகப் பெரிய சந்தை வளாகங்களில் ஒன்றான சென்னை கோயம்பேடு சந்தை வளாகம் கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்கப்படும்.
இதற்கான திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து ரூ.25 கோடியில் செயல்படுத்தும்" என்று அறிவித்தார்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு, சென்னை ஐஐடி பேராசிரியர் இந்துமதியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கோயம்பேடு சந்தை மலர், காய், கனி, உணவு தானிய கிடங்கு வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வளாகத்தை தூய்மையான பகுதியாக மாற்றுவது தொடர்பாக கருத்துகளை இந்துமதி கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், கோயம்பேடு மலர், காய், கனி மொத்த வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜன், சிறுமொத்த வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று,‘‘சந்தையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும். சந்தைக்கு தேவையான மின்சாரத்தை சூரியஒளி மின்சாரம்மற்றும் சந்தையில் தினமும் உருவாகும் 200 டன் குப்பையிலிருந்து தயாரித்து பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினர்.
