

சென்னை: தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் செய்யப்படும் ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அமலாக்கத் துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், 8 மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்.12-ம் தேதி சோதனை நடத்தியது.
குறிப்பாக, தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன் வீடு, உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், மணல் ஒப்பந்ததாரர் கரிகாலன், ஆடிட்டர் டி.சண்முகராஜ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ரூ.12.82 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணக்கில் வராத பணம் ரூ.2.33 கோடி, ரூ.56.86 லட்சம் மதிப்பிலான நகைகள் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து, பினாமி பெயரில் நிறுவனங்கள் தொடங்கி, அதன் மூலம் சட்டவிரோதமாக அதிகப்படியான மணல் அள்ளியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, குவாரிகளில் மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன்ஆகியோரின் 35 வங்கிக் கணக்குகளிலிருந்த பணம் என மொத்தம் ரூ.130.60 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத் துறை கடந்த 2-ம் தேதி தற்காலிகமாக முடக்கியது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னை சிஐடி நகரில் மணல் ஒப்பந்ததாரர் கரிகாலனுக்குச் சொந்தமான வீடு, அடையாறில் உள்ள அவரது உறவினர் அருண் வீட்டில் நேற்றுமதியம் திடீரென சோதனை நடத்தினர். முந்தைய சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.