Published : 15 Feb 2024 06:30 AM
Last Updated : 15 Feb 2024 06:30 AM

‘நீங்க ரோடு ராஜாவா?’ - விழிப்புணர்வு குறும்படம் வெளியிட்ட போலீஸார்

போக்குவரத்து விதி மீறல் தொடர்பான ‘நீங்க ரோடு ராஜாவா?’ எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர், திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், அவரது தாயார் மீனா குமாரி ஆகியோர் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் வெளியிட்டனர். படம்: ம.பிரபு

சென்னை: சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அனுப்பினால், அதை அடிப்படையாக வைத்தும் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்க உள்ளனர்.

போக்குவரத்து விதி மீறல், சாலை பாதுகாப்பு குறுித்து வாகன ஓட்டிகளுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ‘நீங்க ரோடு ராஜாவா?'என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மூலம் விழிப்புணர்வு வீடியோவை போக்குவரத்து போலீஸார் தயார் செய்திருந்தனர்.

இதில், நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதேபோல்சிக்னல்களில் எல்லைக்கோட்டை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றொரு குறும்படத்தை இயக்கி உள்ளார். இதில் நடிகர் யோகி பாபு நடித்துள்ளார்.

இரு போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிட்டுவிழா வேப்பேரியில் உள்ளசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த குறும்படங்களை சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், இயக்குநர் விக்னேஷ் சிவன், அவரது தாயார்மீனாகுமாரி ஆகியோர் இணைந்துவெளியிட்டனர். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் ஆர்.சுதாகர் பேசியதாவது:

ஹெல்மெட் அணியாத வாகனஓட்டிகள் மீது அபராத நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியதால், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்பு சதவீதம் குறைந்துள்ளது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முயற்சியாக ‘நீங்க ரோடு ராஜாவா?’என்ற பெயரில் எடுத்துள்ளோம். யாரேனும் சாலைகளில் தவறானபாதைகளில் சென்றால் அவர்களைசெல்போனில் படம் பிடியுங்கள். அதை@roadraja என்ற சமூக வலைதளத்தில் பதிவிடுங்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசும்போது, ``என்னுடைய அப்பா,அம்மா காவல் துறையைச் சேர்ந்தவர்கள். நான் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். தற்போது நான் திரைப்பட இயக்குநராக இருந்தாலும் ஏதாவது ஒருவிதத்தில் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன்'' என்றார். நிகழ்ச்சியில் போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ்குமார், துணை ஆணையர் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x