Published : 15 Feb 2024 06:08 AM
Last Updated : 15 Feb 2024 06:08 AM

முத்தரப்பு உடன்படிக்கையால் மின்வாரியம் தனியார்மயமாகாது; மானியம் ரத்தாகாது: பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் விளக்கம்

சென்னை: முத்தரப்பு உடன்படிக்கையால், மின்வாரியம் தனியார்மயமாகும், மின்கட்டணம் உயரும், விவசாய மானியங்கள் ரத்தாகும் என்பன போன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று, பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதன் சட்ட ஆலோசகர் முரளி கிருஷ்ணன், பாரதிய மின் பொறியாளர் கழக மாநில பொதுச்செயலாளர் நடராஜன், பாரதிய மின் அலுவலர் கழக பொதுச்செயலாளர் மணி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2010 அக்.19-ம் தேதியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 100-ன்அடிப்படையில் மின்வாரிய தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்து இம்மாதம் 12-ம் தேதி மின்வாரிய நிர்வாகம், தொழிற்சங்கங்கள்மற்றும் தமிழக அரசுக்குஇடையே முத்தரப்பு உடன்படிக்கை ஏற்பட்டது.

இந்த உடன்படிக்கை அடிப்படையில், மின்வாரியம் தனியார்மயமாகும், மின்வாரியத்தை விற்கப் போகிறார்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது, விவசாய மானியங்கள் ரத்தாகும் என பல்வேறு வதந்திகள் தொழிலாளர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரப்பப்படுகின்றன.

கடந்த 1995-ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘காட்’ ஒப்பந்தத்தின் ஒரு பிரிவுதான் மின்வாரிய மறுசீரமைப்பு. அதன் அடிப்படையில், கடந்த2003-ல் புதிய மின்சார சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அனைத்து மாநில மின்வாரியங்களும் கலைக்கப்பட்டு விநியோகம், உற்பத்தி என தனித்தனி நிறுவனங்களாக உருவாக்கப்பட்டன. இதன்படி, தமிழக மின்வாரியமும் டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ, தமிழ்நாடு மின்வாரியம் லிமிடெட் என 3 நிறுவனங்களாக பிரிக்கப்பட்டன.

இதையடுத்து, 2010 அக்.19-ம் தேதி, அரசாணை எண்.100-ஐ வெளியிட்டு மின்வாரிய தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை உறுதி செய்துகொள்ளும் வகையில் முத்தரப்பு ஒப்பந்தம் செய்ய வலியுறுத்தப்பட்டது.

கடந்த 14 வருடங்களாக முத்தரப்புஒப்பந்த உடன்படிக்கை நடைபெறாததால், தொழிலாளர்கள், அலுவலர்கள்,பொறியாளர்கள் எவ்வித பணிப்பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில் தற்காலிக பணியாளர்களாகவே இருந்து வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தம் காரணமாக, அவர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட் டுள்ளது.

எனவே, மின்வாரியம் தனியார்மயமாகும், மின்கட்டணம் உயரும், விவசாய மானியங்கள் ரத்தாகும் என்பன போன்ற தவறான தகவலை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x