Published : 15 Feb 2024 06:04 AM
Last Updated : 15 Feb 2024 06:04 AM
சென்னை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கோடம்பாக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே திடீரென ஒன்றுதிரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றுள்ள பார்வை திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனத் தேர்விலிருந்து முழுமையாகவிலக்களித்து, உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புத் தேர்வு நடத்த வேண்டும். ஊக்கத் தொகையை 1000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்: சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சாலை மறியலால் வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் மற்றும் வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த கோடம்பாக்கம் போலீஸார் நிகழ்விடம் விரைந்து போராட்டக்காரர்களிடம் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, சாலையில் அமர்ந்திருந்தவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், பெண் போலீஸார் வரவழைக்கப்பட்டு அப்புறப் படுத்தப்பட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறும்போது, ``கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக 5 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை இன்னும் யாரும் வந்து பார்க்கவில்லை. நேற்று முன்தினம் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்த நுங்கம்பாக்கம் போலீஸார், அழைத்துச்சென்று பூந்தமல்லி அருகே வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் அதிகாலையில் இறக்கிவிட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி 2013-ல் போராட்டம் நடத்தியபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதையை முதல்வர் மு.க.ஸ்டாலின், ராயப்பேட்டை மருத்துவமனையில் எங்களைச் சந்தித்து, ஆட்சிக்கு வந்தால் கோரிக்கையை நிறை வேற்றுவதாக நேரடியாக வாக்குறுதியாக அளித்தார். ஆனால், அவரே வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது வேதனையாக உள்ளது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT