Published : 09 Feb 2018 07:05 PM
Last Updated : 09 Feb 2018 07:05 PM

டிராக்டர் ஏற்றி நெற்பயிரை நாசமாக்கிய விவகாரம்: அத்துமீறிய பெண் டிஎஸ்பிக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்

டிராக்டர் ஏற்றி நெற்பயிரை நாசமாக்கியதுடன், நில உரிமையாளரிடம் அத்து மீறி நடந்த ஆரணி டிஎஸ்பி ஜெரினா பேகத்துக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது தம்பி தியாகராஜன். விவசாயிகளான இவர்களுக்கு அதே பகுதியில் சுமார் 16 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தின் பட்டா மற்றும் பத்திரம் தியாகராஜன் மகள் சாமுண்டீஸ்வரி பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தில் அண்ணாமலையின் மகள் சாவித்திரி பயிரிட்டிருந்தார்.

இந்த நிலம் தொடர்பாக சாமுண்டீஸ்வரிக்கும், சாவித்திரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆரணி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அந்த விவசாய நிலத்திற்காக சாமுண்டீஸ்வரிக்கும், சாவித்திரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி டி.எஸ்.பி. ஜெரினாபேகம் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது டிஎஸ்பி ஜெரினாவின் உத்தரவின் பேரில் டிராக்டர் மூலம் நெற்பயிரை சேதப்படுத்தியதாகவும், அதை தடுத்து நிறுத்திய சாவித்திரியை கீழே தள்ளியதுடன், தரதரவென இழுத்து காவல்துறையினர் அத்துமீறியதாகவும், இதற்கு ஆணையிட்ட டிஎஸ்பி பாதிக்கப்பட்டவர்களை மிரட்டிய செய்திகளும், வீடியோவும் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இதையடுத்து டிஎஸ்பி ஜெரினா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இந்த சம்பவத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து ஆரணி டி.எஸ்.பி. ஜெரினா பேகம் பிப்ரவரி 27-ம் தேதி காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x