

மதுரை: சம்பளம், ஓய்வூதியம் கேட்டு மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் சில மாதங்களாகவே முறையாக சம்பளம், ஓய்வூதியம் வழங்க முடியவில்லை. தாமதமாக வழங்கினாலும், கடந்த 2 மாதத்துக்கான சம்பளம், ஓய்வூதியம் இதுவரையிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், 2 நாளாகவே 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல்கலைகழக வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு பல்கலை நிர்வாக அலுவலர் சங்க உதவி தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் முத்தையா முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தையொட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து அலுவலகங்களும், அறைகளும் பூட்டப்பட்டன. பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய விடைத் தாள்களை திருத்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 60க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வெகு நேரமாக காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றனர்.