செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முதல் விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.14, 2024

செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முதல் விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.14, 2024
Updated on
3 min read

ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித் தீர்மானங்கள்: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தனித் தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியே ஆக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று... ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மிக மோசமான எதேச்சதிகார திட்டம். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.

இரண்டு... மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதி. இதனை முறையடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தனித் தீர்மானங்கள்: வானதி சீனிவாசன் கருத்து: தனித் தீர்மானங்கள் மீதான விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “வருங்காலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறையும்போது நமக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுமோ என்ற அச்சம் நியாயமானது. பாஜகவை பொறுத்தவரை இந்த தீர்மானத்தின் மீதான கவலையை, அக்கறையை புரிந்துகொள்கிறது. நிச்சயமாக எந்த இடத்தில் என்ன நடவடிக்கை வேண்டுமோ, தமிழக பாஜக முழுமையாக அந்த தீர்மானத்தை புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கும்” என்று பேசினார்.

இதனிடையே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது காலத்தின் கட்டாயம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் வாதங்கள்: “தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. வெளிநாடுகளுக்குத் தப்பிவிடுவார் என்றால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், செல்வாக்கான அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக்கூடும் என்று வாதிட்ட அமலாக்கத் துறை தரப்பு, “எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்துதான் பெறப்பட்டன” என்று தெரிவித்தது. இதையடுத்து அமலாக்க துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை வியாழக்கிழமை பிற்பகலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

பொன்முடிக்கு எதிரான வழக்கு: விசாரணை தேதிகள் மாற்றம்: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனுக்களின் விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை என்பதற்கு பதிலாக மார்ச் 12-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை என மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“மிருகத்தனமான சக்தியை பயன்படுத்துகிறது அரசு” - விவசாயிகள்: “நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், அரசு மிருகத்தனமான பலத்தை விவசாயிகளுக்கு எதிராக பயன்படுத்துகிறது. அவர்களை எதிரிகளைப் போல நடத்துகிறது” என்று விவசாய சங்கத் தலைவர்கள் குற்றம்சாட்டினர். பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட விவசாயிகளின் டெல்லி சலோ பேரணியின் இரண்டாவது நாளில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மறுபுறம், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஏற்கெனவே விவசாயிகளின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

“போர்க்களத்தை விட கொடுமையான சூழல்” - முதல்வர் காட்டம்: “மத்திய பாஜக அரசு தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தை விடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

விவசாயிகள் மீது 2-வது நாளாக கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கிய பேரணியை செவ்வாய்க்கிழமை தொடங்கிய விவாசயிகள், இரவு இடைநிறுத்ததுக்கு பின்னர் புதன்கிழமை இரண்டாவது நாளாக பேரணியைத் தொடங்கினர். பலத்த பாதுகாப்பு தடைகளை மீறி டெல்லி செல்ல மீண்டும் ஒரு முயற்சியை அவர்கள் எடுத்தனர். எனினும், விவசாயிகள் தடுப்புகளை நெருங்காமல் இருக்க ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் போலீஸார் மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுத்தனர்.

“அவர்கள் விவசாயிகள், கிரிமினல்கள் அல்ல”: “பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி செல்கின்றனர். ஹரியானாவில் அவர்களுக்காக சிறைச்சாலை தயாராகி வருவதாகவும், அவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் செய்தித்தாள்களின் மூலம் தெரிந்து கொண்டேன். அவர்கள் விவசாயிகள், கிரிமினல்கள் அல்ல. இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான். நாம் நம்முடைய ‘அன்னதாதா’க்களிடம் பேச வேண்டும். அவர்களை கிரிமினல்களைப் போல நடத்தக் கூடாது” என்று விவசாயிகளுக்கு ஆதரவாக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் மதுரா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை பதவிக்கு சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தானில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். ராஜஸ்தானில் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிச்சயம் என்பதால் அந்தப் பதவிக்கு, சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

ஐந்து முறை மக்களவை உறுப்பினராக பணியாற்றிய சோனியா காந்தி, முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க இருக்கிறார். இந்திரா காந்திக்கு பின்னர் காந்தி குடும்பத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக நுழைய இருப்பவர் சோனியா என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, தன்னை அதிமுகவில் இன்று இணைத்துக் கொண்டார். பாஜகவில் தனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என்பதால் அதிமுகவில் இணைந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in