

சென்னை: முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையின் 2-ம் நாள் நிகழ்வுகள் நேற்று தொடங்கின. முதலில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளும், முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.வடிவேல் (வாணியம்பாடி), ஏ.தெய்வநாயகம் (மதுரை மத்தி), எம்.தங்கவேல் (முசிறி), துரை ராமசாமி (வெள்ளக்கோவில்), கு.க.செல்வம் (ஆயிரம்விளக்கு), எஸ்.ராஜசேகரன் (ஆலங்குடி) ஆகியோரது மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.
தொடர்ந்து, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் எஸ்.வெங்கிடரமணன், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத், தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழக முன்னாள் தலைமைச் செயலர் எம்.எம்.ராஜேந்திரன், தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்களை பேரவை தலைவர் வாசித்தார். முன்னாள் உறுப்பினர்கள், பிரமுகர்களின் மறைவுக்கு பேரவை இரங்கல் தெரிவிப்பதாக அறிவித்தார். தொடர்ந்து, இரங்கல் தெரிவிக்கும் வகையில், அவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.