

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்ததற்கு, பேரவைத் தலைவரின் செயல்பாடுதான் காரணம் என்று அண்ணாமலை நேற்று குற்றம் சாட்டினார்.
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜகவின் தேர்தல் அலுவலகத்தை, தண்டையார்பேட்டையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில், பேரவைத் தலைவர் அப்பாவு, திமுகவின் தொண்டனைப்போல நடந்து கொள்கிறார். பேரவைத் தலைவர் பொறுப்பு வகிப்பவருக்கு எந்தக் கட்சியைச் சார்ந்தும் பேசுவதற்கு அதிகாரம் இல்லை. இவ்விவகாரத்தில் அவர் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை. அதேபோல ஆளுநர் உரையில் இடம்பெற்றவை அனைத்துமே முதல்வரின் சுயபுராணம் மட்டுமே. இதை வைத்து தமிழக அரசை எப்படி பாராட்ட முடியும்.
ஆளுநர் மேடையில் அமர்ந்திருக்கும் போதே கோட்சே உள்ளிட்ட பெயர்களை தேவையின்றி பேரவைத் தலைவர் உபயோகப்படுத்தியுள்ளார். கோட்சேவுக்கும், ஆளுநருக்கும் என்ன சம்பந்தம்? பின்னர் பிரதமர் நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் கோடி வாங்கி தாருங்கள் என்று கேட்கிறார். இப்படியா பேரவைத் தலைவர் பேசுவது?
இதன் காரணமாகத்தான் அவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பதாக நான் பார்க்கிறேன். தேசியகீதம் தொடர்பான விவாதத்தில் பாஜக நுழைய விரும்பவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்து, அதன்பின் தேசிய கீதம், சபை நடவடிக்கைகள் நடக்கும். முடிவில் மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்படும். இதுவே எங்களின் நிலைப்பாடு.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடரக்கூடாது என ஆரம்பத்தில் இருந்தே பாஜக வலியுறுத்தி வருகிறது. அவர் ராஜினாமா செய்திருப்பது பாஜகவுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம். செந்தில் பாலாஜியை ஜாமீனில் வெளியே கொண்டு வருவதற்காக அவரது தம்பி அசோக்குமாரை ஒருவாரத்தில் ஆஜர்படுத்துவார்கள் என நினைக்கிறேன் என்றார்.
தமிழக பாஜக துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், பால் கனகராஜ், செய்தி தொடர்புத் துறை மாநிலதலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், வடசென்னை மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார் பங்கேற்றனர்.