எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை: பேரவைத் தலைவருக்கு முதல்வர் பரிந்துரை

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை: பேரவைத் தலைவருக்கு முதல்வர் பரிந்துரை
Updated on
1 min read

சென்னை: சட்டப்பேரவையில் தங்கள் கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறு பரிசீலனை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவைத் தலைவருக்கு பரிந்துரைத்ததால், ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படும் சூழல் எழுந்துள்ளது.

சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை அருகில்தான் துணைத் தலைவர் அமர்வது பேரவையில் மரபாக உள்ளது. துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்படவேண்டும். இதுகுறித்து பலமுறை தங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர், தங்கள் கட்சியின் துணைதலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள உதயகுமாருக்கு இடம் ஒதுக்கித் தரும் பிரச்சினை குறித்து அவையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். நீங்களும் பேரவைத் தலைவரின் உரிமை என்று பதிலளித்து, ஏற்கெனவே இதே அவையில் பேரவைத் தலைவராக இருந்த தனபால் என்ன தீர்ப்பு தந்தாரோ, அதை அடிக்கடி நீங்களும் சுட்டிக்காட்டி பதில் கூறி வருகிறீர்கள். இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்துள்ள கோரிக்கையை மறு பரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யும்படி தங்களிடம் நான் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இதையடுத்து பேரவைத்தலைவர் மு.அப்பாவு, “முதல்வர் கூறியதை ஏற்று, தக்க முடிவை நான் எடுக்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in