

திருச்சி: டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் நேற்றுமறியலில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் திரண்டு வருகின்றனர். ஆனால், அவர்களைத் தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைக் கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமை வகித்தார்.
அப்போது, "ஜனநாயக நாட்டில்விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி எந்தப் பகுதியிலும் போராடலாம் என அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை பறிக்கும் வகையில், மத்திய அரசு போராட்டத்தை தடுக்க முயற்சிக்கிறது" என்று தெரிவித்த விவசாயிகள், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சில விவசாயிகள் அருகில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கோஷமெழுப்பினர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி, கீழே இறங்கச் செய்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 66 பேரை போலீஸார் கைது செய்தனர்.