Published : 14 Feb 2024 05:16 AM
Last Updated : 14 Feb 2024 05:16 AM

வானியல் ஆய்வுக்கான `எக்ஸ்போசாட்' செயற்கைக்கோள் நியூட்ரான் நட்சத்திரம் தொடர்பான தரவுகள் சேகரிப்பு

சென்னை: எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் மூலம் கிராப் பல்சர் எனும், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது.

இது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜன. 1-ம் தேதி பூமியில் இருந்து 650 கி.மீ. உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளிவரும் கதிரியக்கம், விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து 5 ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

இந்நிலையில், எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் மூலம் நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மொத்தம் 469 கிலோ எடை கொண்ட எக்ஸ்போசாட் செயற்கைக்கோளில், எக்ஸ்பெக்ட் (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோகிராபி), போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரி மீட்டா்) ஆகிய இரு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனமும், யுஆர்ராவ் செயற்கைக்கோள் மையமும் உருவாக்கியுள்ளன.

எக்ஸ் கதிர்களின் செயல்பாடு: எக்ஸ்பெக்ட் சாதனம் எக்ஸ்கதிர்களின் நீண்டகால செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள ஏதுவாக, அவற்றின் மூலங்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல்பாடுகளைக் கண்காணிக்கும்.

அதன்படி, காசியோபியா ஏ எனும் விண்மீன் வெடிப்பில் (சூப்பர் நோவா) இருந்து வெளிப்படும் ஒளியை எக்ஸ்பெக்ட் கருவி கடந்த ஜனவரி முதல் வாரத்தில் படம் பிடித்தது. அதேபோல, போலிக்ஸ் கருவி விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியேறும் எக்ஸ் கதிர்களின் துருவ முனைப்பு அளவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் நிலை குறித்து ஆராயும்.

போலிக்ஸ் கருவி கடந்த ஜனவரி 15 முதல் 18-ம் தேதிவரையான காலத்தில் விண்வெளியில் உள்ள கிராப் பல்சர் (crab pulsar) எனும் இளம் வயது நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்துவெளியேறும் எக்ஸ் கதிர்களின் தரவுகளை சேகரித்து வழங்கிஉள்ளது. அதற்கான தரவுகளின் வரைபடமும் வெளியிடப்பட்டுஉள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x