Published : 14 Feb 2024 06:15 AM
Last Updated : 14 Feb 2024 06:15 AM
சென்னை: சென்னை தீவுத்திடலை சுற்றி பார்முலா-4 கார் பந்தயம், ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலை மார்க்கமாக கடந்த டிச.9,10 ஆகிய தேதிகளில் நடத்த திட்ட மிடப்பட்டது.
இந்த பந்தயத்தை சென்னை மாநகருக்குள் நடத்த தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. சட்டப்பூர்வமான அனுமதி பெறாமல் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தனியார் நிறுவனம் இந்த பந்தயத்தை நடத்துகிறது.
இதனால் தமிழக அரசுக்கு எந்தவொரு வருவாயும் இல்லை. இதற்காக தமிழக அரசு ரூ.40 கோடியை செலவு செய்திருப்பது தவறு. பந்தயம் நடக்கும் பகுதியில் அரசு பன்னோக்கு மருத்துவமனை உள்ளதால் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். பொது போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும், எனவே, இந்த கார் பந்தயத்தை சென்னைக்குள் நடத்த தடை விதிக்க வேண்டும் என வழக்கு மனுவில் கோரப்பட்டிருந்தது.
நீதிபதிகள் கேள்வி:இதனிடையே, டிசம்பரில் ஏற்பட்ட மி்க்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக பார்முலா-4 கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பார்முலா-4 கார் பந்தயம் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘மழை, வெள்ளம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த பார்முலா 4 கார் பந்தயத்தை ஜூன்மாதத்துக்குப் பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பந்தயத்துக்காக ராணுவம் மற்றும் கடற்படையிடம் இருந்தும் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கார்கள் கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும். இதற்கு மருத்துவமனை தரப்பிலும் அனுமதி பெறப்பட்டுள்ளது’’ என்றார். அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் 16-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT