Published : 14 Feb 2024 06:20 AM
Last Updated : 14 Feb 2024 06:20 AM

போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே நிறுத்த அனுமதி: பணிமனைகளில் பயணிகளை ஏற்றும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

சென்னை: போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் தவிர்த்து இதர இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 9-ம் தேதி ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, சென்னை புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றிஇறக்க வேண்டும். ஆனால்,ஆம்னி பேருந்து பணிமனைகள் அமைந்துள்ள இடங்களிலும் பயணிகளை ஏற்றிஇறக்கலாம் என தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. இதுகுறித்து துறையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்றி இறக்கஉயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. தங்களது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளின் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும் செயலாகும்.

மேலும், பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாக 2 சுங்கச்சாவடிகளைத் தவிர்த்து பிற இடங்களை முன்பதிவு செயலியில் குறிப்பிடக் கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு அடிப்படையில் ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றிஇறக்குவதை தவிர்க்க வேண்டும். இதனால் பயணிகளுக்கு தேவையற்ற சிரமங்கள் ஏற்படும்.

அத்தகைய நடவடிக்கை ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததை கேள்விக்குறியாக்கும் செயல் ஆகும். மேலும் பணிமனைகளை ஒருபோதும் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ பயன்படுத்த இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x