Published : 14 Feb 2024 07:06 AM
Last Updated : 14 Feb 2024 07:06 AM

சென்னை மழை வெள்ள பாதிப்புக்கு யார் காரணம்? - சட்டப்பேரவையில் திமுக, அதிமுக காரசார விவாதம்

சென்னை: சென்னை மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து திமுக உறுப்பினர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம்.

அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்: ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, சென்னை மற்றும் மாநில அளவில் புயல் மற்றும் கனமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று.

ஆனால், சென்னை பெருமழை பாதிப்புக்கு முறையான திட்டமிடல் இல்லாதது காரணம். வானிலை மையம் 5 நாட்களுக்கு முன்பாக ரெட் அலர்ட் எச்சரிக்கை வழங்கியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுக்கவில்லை.

அமைச்சர் சேகர்பாபு: அதிமுக உறுப்பினர் சென்னையை சேர்ந்தவர் இல்லை என்பதால், அரசு மேற்கொண்ட பணிகள் அவருக்கு தெரியவில்லை. பருவமழைக்கு முன்பாகவே திட்டமிட்டு முதல்வர் தலைமையில் தொடர் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றன. ஒரே இரவில் மூன்று மணி நேரத்தில் 33 செமீ மழை பெய்தது.

மூன்று நாட்களுக்குள் இந்த நிர்வாக திறமையுள்ள அரசால் இயல்பு வாழ்க்கைக்கு திருப்பியது. 2016-ம்ஆண்டு இதேபோன்று பெருமழை பெய்தது. அதுவும் ஒருவாரம் பெய்த மழையின் அளவு 33 செமீதான். அப்போது, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப 10 நாட்கள் ஆனது.

இந்த அரசு மூன்று நாட்களில் இயல்பு வாழ்க்கைக்கு திருப்பியுள்ளது. கடுமையான நிதி நெருக்கடி இருந்தபோதும், புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.70 கோடி அளவுக்கு உணவுப் பொருட்களை கட்டணமில்லாமல் இந்த அரசு வழங்கியது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கியுள்ளது. இந்த அரசை பாராட்டி, வரவுள்ள மக்களவைத் தேர்தலில் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளையும் திமுகவுக்கு பரிசாக வழங்க சென்னை மக்கள் தயாராக உள்ளனர்.

ஆர்.பி.உதயகுமார்: 2011-ம் ஆண்டில் தானே புயலில் தொடங்கி வர்தா, கஜா, நிவர் புயல் மட்டுமின்றி சுனாமி வந்த வேகத்தைவிட, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க, மெரினா கடற்கரையில் நின்றுமக்களை காத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

கஜா புயல் வந்த போது, முதல்வராக இருந்த பழனிசாமி மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து 24 மணி நேரமும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்து கொண்டே இருந்தார். சென்னையில் உள்ள அமைச்சர்கள் ஒரு சொட்டு தண்ணீர்கூட சென்னையில் தேங்காது என்று உறுதியளித்தனர். மக்கள் அதனை நம்பினார்கள்.

சேகர்பாபு: 2021-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இன்றைய எதிர்க்கட்சி தலைவர், அன்றைய முதல்வர், சென்னையில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மழைநீர் வடிகால் கட்டி முடித்துவிட்டோம். சென்னையை சிங்கப்பூராக மாற்றிவிட்டோம். எவ்வளவு மழை வந்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: நான் அப்படி ஒன்றும் பேசவில்லை. நன்றாக தெரிந்து கொண்டு அமைச்சர் பேச வேண்டும். 2,400 கிமீ மழைநீர் வடிகால் சீர்செய்ய, நிதி ஆதாரங்கள் திரட்டப்பட்டு, 1,240 கிமீ மழைநீர் வடிகால் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், உங்கள் ஆட்சி வந்த பிறகு மீதமுள்ள பணிகளின்போது, 98 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது எனவும், எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது என்று அமைச்சர்கள்தான் அறிவிப்பு கொடுத்தனர்.

அமைச்சர் கே.என்.நேரு: நீங்கள் ஆட்சியைவிட்டு இறங்கிய பின்னர் வந்த பெருமழையால் சென்னையில் மிகப்பெரிய வெள்ளம் வந்தது. ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து, அவர்கள் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் ரூ.2,100 கோடிக்கான மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. 20 செமீ அளவுக்கு மழை பெய்யும்போது தண்ணீர் எளிதாக வடிந்துவிடுகிறது.

ஒரேநாளில் அதிக அளவில் வந்ததால்தான் தண்ணீர் தேங்கியது. தேங்கிய தண்ணீர் இரண்டே நாட்களில் வடிந்துவிட்டது. 20 செமீ அளவுக்கு மழை பெய்தால் சென்னையின் பெரும்பகுதியில் தண்ணீர் நிற்காது. கொசஸ்தலை ஆறு திட்டம் முடிந்துவிட்டால், கூடுதலாக 10 செமீ மழை பெய்தாலும் தண்ணீர் வடிந்துவிடும். அதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

உதயகுமார்: இதுவரை திமுக ஆட்சிக்காலத்தில் வெள்ள தடுப்புக்கு சென்னை மாநகராட்சிக்கு ஒரு பைசாகூட ஒதுக்கீடு செய்யவில்லை. தொலைநோக்கு சிந்தனையோடு வெள்ள தடுப்பு நிதியை ஏற்படுத்தியவர் முதல்வராக இருந்த பழனிசாமிதான். மழை வெள்ளத்தால் சென்னை உட்பட தென்மாவட்டங்கள் தத்தளித்தபோதும், 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இன்னும் மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசாகூட வாங்க முடியவில்லை.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: நாங்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசா வராவிட்டாலும்கூட, தமிழக அரசு தனது நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் உட்பட பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், முன்னறிவிப்பு எதுவும் செய்யாமல் 2015 டிசம்பரில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்ததால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அந்த காயம் இருக்கும்.

பழனிசாமி: கஜா புயலால் தென்மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டபோது, அந்த சேதத்துக்கு இழப்பீட்டை அதிமுக அரசு வழங்கியது.

காவிரி பிரச்சினை தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு காலதாமதம் செய்தபோது, 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் சூழலை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்தினர். செம்பரம்பாக்கத்தில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாக அமைச்சர் சொல்கிறார்.

அந்த அமைச்சர் சென்னையில்தான் இருக்கிறார். 35 ஆயிரம் கன அடிதான் திறக்க முடியும். நீர்வளத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்ளுங்கள். தெரியவில்லை என்றால் கேட்டுவிட்டு பேசுங்கள். அங்கு நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன. கனமழையால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வெள்ள சேதம் ஏற்பட்டதுதான் உண்மை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x