Published : 14 Feb 2024 06:16 AM
Last Updated : 14 Feb 2024 06:16 AM

வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர் சங்கங்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஈட்டிய விடுப்பு சரண்டர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், ஜாக்டோ ஜியோ மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்நேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு வெளியிட்டசெய்தியில் கூறியிருப்பதாவது: இந்த அரசு எப்போதுமே அரசுஊழியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறது.கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, பல்வேறு அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில், தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில், கடந்தாண்டு ஜூலை 1 முதல்மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தும் நாளிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்படுகிறது. பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 2016,2017, 2019-ல் அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத் தக் காலங்கள் மற்றும்தற்காலிகப்பணிநீக்க காலங்கள் பணிக்காலமாக வரன்முறை செய்யப்பட்டுள்ளது.

சிறப்புக் காலமுறை ஊதியத்தில்பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு போக்குவரத்துப்படி ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமி்ன்றி, ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில்கொண்டு 2021-22-ம் ஆண்டில் ரூ.25கோடியும், 2022-23-ம் ஆண்டில் ரூ.50 கோடியும் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்துக்கு சிறப்பு நிதியாகஅரசு வழங்கியுள்ளது.

மேலும், நிலுவையிலுள்ள விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய ரூ.25 கோடி சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்டது. பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 60,567பேருக்கு அரசுப்பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள், மேலும் 10 ஆயிரம் பேர் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். புதியஅரசுப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில் எவ்விதமான தடங்கலும் இல்லை.

தமிழக அரசு ஊழியர்களின் பலகோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், தொடர்ச்சியாக தமிழகம் சந்தித்த 2 பெரும் இயற்கைப் பேரிடர்கள், எதிர்பாராத பெரும் செலவினங்கள், மத்திய அரசிடம் இருந்துநிதி பெறப்படாத நிலையில், மாநில அரசே மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை உள்ளது.

மேலும், ஜிஎஸ்டி இழப்பீடு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிறுத்தம்போன்றவற்றால், மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், அரசு வருவாயை பெருக்கி நிதிநிலையை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

விரைவில் நிதிநிலை சீரடைந்ததும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன்பரிசீலிக்கும். அரசு ஊழியர்கள்ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் இந்த அரசு உணர்ந்தே இருக்கின்றது. எனவே இந்தச் சூழலில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த அறிவிப்பினைக் கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ ஜியோ நிராகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசின் வேண்டுகோளை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நிராகரித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் 3 அமைச்சர்கள் இன்று (பிப்.13) நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் வெளியிட்ட பத்திரிகை செய்தியை ஜாக்டோ ஜியோ முற்றிலுமாக நிராகரிக்கிறது.

வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை முதல்வர் அழைத்துப் பேசி வாழ்வாதார கோரிக்கைகள் தொடர்பாக அரசின் முடிவினை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x