Published : 14 Feb 2024 04:06 AM
Last Updated : 14 Feb 2024 04:06 AM
விழுப்புரம்: லாரிகளில் ஏற்றி இறக்கும் தொழிலாளர்களின் கூலி பிரச்சினையால் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு, தற்போது சுற்று வட்டார விவசாயிகளால் அதிகஅளவில் நெல் மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படு கின்றன. திருவண்ணாமலை உள் ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயி கள் இந்த ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு தங்களது விளைபொருட்களை விற்க வருகின்றனர். ஆனால் இங்கே இடப் பற்றாக்குறை நிலவுகிறது. மத்திய அரசின் ‘ஈநாம்’ திட்டத்தில் எடை போட்டு, தரம் பிரித்து விலை போடுவதில் ஏற்படும் காலதாமதம், பின்னர் விவசாயிகளின் சாக்குபையில் இருந்து வியாபாரிகளின் சாக்கு பையில் நெல்லை மாற்றுவதில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றால் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது.
ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம்முதல் 30 ஆயிரம் வரை நெல்மூட்டைகள் வரத்து உள்ளன. இதன் காரணமாக கமிட்டி நிர்வாகம் திணறி வருகிறது. இதற்கிடையே, நெல் ரகங்களை வியாபாரிகளின் கோணிப் பையில் மாற்றி, லாரிகளில் ஏற்றும் தொழி லாளர்கள் தங்களது ஒப்பந்த கூலியை முன்னர் அறிவித்தபடி உயர்த்த வேண்டும் என அறிவித்து, இங்கு வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் எடுத்து வந்த சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கமிட்டி மைதானத்திலும், குடோன்களிலும் தேக்கம் அடைந் துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக நெல் மூட்டைகளுக்கு விலைபோடு வார்கள் என காத்திருந்த விவசாயிகள், நேற்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இத்தகவல் அறிந்த செஞ்சி போலீஸார் மற்றும் செஞ்சி வட்டாட்சியர் ஏழுமலை ஆகியோர் அங்கு வந்து,விவசாயிகளை சமாதானப் படுத்தி, விற்பனைக் கூட அலுவலகத்தின் உள்ளே விவசாயிகளை அழைத்துச் சென்றனர்.
‘விளைபொருட்களை எடுத்து வர வேண்டாம்’: வியாபாரிகள் - கூலித் தொழிலாளர்கள் இடையேயான கூலி உயர்வு பிரச்சினையில் சுமூகத் தீர்வு எட்டும் வரை, விவசாயிகள் நெல் உள்ளிட்ட தங்களது விளைப் பொருட்களை செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்துவர வேண்டாம் என்று அந்த விற்பனைக் கூடத்தின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிலைமை சீரானதும் விற்பனைக்கூடம் இயங்குவது தொடர்பாக பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT