

திருநெல்வேலி மாவட்ட அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து 11 சிறார்கள் நேற்றிரவு தப்பியோடினர். அவர்களில் 4 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு புறவழிச்சாலை அருகே அரசு கூர்நோக்கு இல்லம் இருக்கிறது.
இதில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட சிறார் குற்றவாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது 18 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த கூர்நோக்கு இல்லத்துக்கு ஒரு வார்டனும் பாதுகாப்புக்கு ஒரு போலீஸ்காரரும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் போலீஸையும் வார்டனையும் தாக்கிவிட்டு 11 சிறார்கள் தப்பியோடினர்.
இது குறித்து உடனடியாக நெல்லை மாநகர காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் தேடுதல் வேட்டையைத் துரிதப்படுத்தினர்.
தப்பி ஓடிய சிறார்களில் இருவர் தாமிரபரணி ஆற்றுப் பகுதியிலும் இருவர் தெற்கு புறவழிச் சாலை பகுதியில் இருந்தும் பிடிபட்டனர். எஞ்சியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.