Last Updated : 13 Feb, 2024 07:47 PM

3  

Published : 13 Feb 2024 07:47 PM
Last Updated : 13 Feb 2024 07:47 PM

தமிழக காங்கிரஸ் சிட்டிங் எம்.பி.க்களில் யார் யாருக்கு ‘சீட்’ மறுக்கப்பட வாய்ப்பு?

2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிர கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கடந்த முறை 9 இடங்களில் போட்டியிட்டது. இதில் 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. கடந்த முறை வெற்றி பெற்றவர்கள் யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு, யாருக்கு வாய்ப்பில்லை என்பதை தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தோம். அதன் பின்னணி இதோ...

யாருக்கெல்லாம் வாய்ப்பில்லை! - ஜோதிமணி - கரூர்: இவருக்கும் சொந்தக் கட்சியில் எதிர்ப்பு மனநிலை இருக்கிறது. குறிப்பாக, இவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதம் காங்கிரஸ் டெல்லி அலுவலகத்துக்கு அனுப்பபட்டதாக சொல்லப்படுகிறது. தொகுதியில் பெரிதாக வேலை செய்யவில்லை என்னும் குற்றச்சாட்டும் இவர் மீது வைக்கப்படுகிறது. இதனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என தகவல் சொல்லப்படுகிறது.

திருநாவுக்கரசர் - திருச்சி: ‘இவருக்கு தொகுதி ஒதுக்கக் கூடாது’ என தீர்மானம் போடப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. அமைச்சர் நேரு போன்ற சீனியர்களை மதிப்பதில்லை என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எனவே, இம்முறை இவருக்கு சீட் இல்லை என சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் முணுமுணுகின்றனர்.

விஷ்னு பிரசாத் - ஆரணி தொகுதி: இவரின் செயல்பாடுகள் சொல்லப்படும் அளவு இல்லை. எனவே, இவருக்கு சீட் ஒதுக்கப்படாது என்னும் தகவல் சொல்லப்பட்டு வருகிறது.

ஜெயக்குமார்- திருவள்ளூர்: திமுகவை வெளிப்படையாகக் கூட்டங்களில் விமர்சனம் செய்திருக்கிறார். சொந்தக் கட்சியிலும் இவருக்கு எதிரான மனநிலையில் ஒரு கூட்டமே கூடியுள்ளது . இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதும் சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது.

கார்த்தி சிதம்பரம் - சிவகங்கை: கடந்த காலங்களில் இவர் சொந்தக் கட்சியை விமர்சனம் செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். திமுகவினரும் இவர் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே, இவருக்கு இம்முறை வாய்ப்பில்லை என்கின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள்.

யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு உறுதி: செல்லக்குமார் - கிருஷ்ணகிரி: இவருக்கு சீட் வழங்கப்படும். ஆனால், திமுகவும் கிருஷ்ணகிரியில் போட்டியிட திட்டமிடுவதால், அந்தத் தொகுதி ஒதுக்கப்படுமா என்பது சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது.

மாணிக்கம் தாகூர் - விருதுநகர்: இவர் மீது மாநில அளவில் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், டெல்லியில் இவருக்கு சற்று செல்வாக்கு இருப்பதால் மீண்டும் சீட்டை உறுதி செய்துவிடுவார் என சொல்லப்படுகிறது. விருதுநகர் தொகுதியை மதிமுகவும் கேட்கிறது. அதனால், இந்தத் தொகுதி மாணிக்கம் தாகூருக்கு ஒதுக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், திமுக கூட்டணி ஒரு தொகுதிதான் என்றால், மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்படும். இவர் விருதுநகரில் போட்டியிடுவது உறுதியாகும் என கருத்து சொல்லப்படுகிறது.

விஜய் வசந்த் - கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மற்ற காங்கிரஸ் கட்சியினர் எம்.பி பதவிக்கு காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால், இவருக்கு சீட் உறுதியாக வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை நடத்தியதில் பொருளாதார ரீதியில் முக்கியப் பங்காற்றியவர் விஜய் வசந்த். எனவே, இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இது தற்போதைய நிலவரம் மட்டும்தான்.தேர்தல் நெருங்கும் வேளையில், மாற்றம் ஏற்படலாம் . ஒருவேளை, கூடுதல் இடம் திமுக ஒதுக்கினால் வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் தகவல் சொல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x