Published : 13 Feb 2024 02:57 PM
Last Updated : 13 Feb 2024 02:57 PM

சாந்தனுக்கு இலங்கை துணைத் தூதரகம் தற்காலிக பயண ஆவணம் வழங்கல்: தமிழக அரசு தகவல் @ ஐகோர்ட்

கோப்புப்படம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணைத் தூதரகம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து, கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்தவர்களான முருகன், சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சாந்தனுக்கு இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளது. அந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. எனவே, தற்போது நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பதாக தெரிவித்தார். அதனடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்

இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x