“எண்ணத் தாளாத துக்கம்” - வெற்றி துரைசாமி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

“எண்ணத் தாளாத துக்கம்” - வெற்றி துரைசாமி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
Updated on
1 min read

சென்னை: வெற்றி துரைசாமியின் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45), விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்துக்கு சென்றார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங்நளா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. 9 நாளாக வெற்றி துரைசாமியின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில், அவரது உடல் நேற்று மீட்கப்பட்டது.

வெற்றி துரைசாமியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில், “சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது.

வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம். மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன். அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

வெற்றி துரைசாமியின் உடலுக்கு இன்று (பிப்.13) பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், தொடர்ந்து கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது உடலை தகனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in