Published : 13 Feb 2024 10:08 AM
Last Updated : 13 Feb 2024 10:08 AM

கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் ஜி.கே.வாசனுக்குதான் - தமாகா செயற்குழுவில் தீர்மானம்

தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை செயற்குழு தனக்கு வழங்கியிருப்பதாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாவட்ட வாரியாக கட்சியின் பலத்தை அறியும் வகையில் தமாகா செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி ஆகியவற்றில் எதனுடன் இணைவது என்பது குறித்தும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கும் முழு அதிகாரம் கட்சியின் தலைவருக்கு அளிப்பது என பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி கட்சியின் முன்னணி தலைவர்களோடு கலந்தாலோசித்து கட்சியின் உறுதியான நிலைபாட்டை வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். தமிழகத்தில் ஆளுங்கட்சி கூட்டணியை தவிர்த்து, மற்ற கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யவில்லை.

பாஜக-வாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் அதன் தலைவர்களோடு நல்ல பரிட்சயம் உண்டு. அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். கூட்டணி இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக தமாகா செயல்பட்டு வருகிறது. எங்களுடைய பலத்தை குறைத்துக்கொள்ளும் அளவுக்கு கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையை பெற மாட்டோம். தமாகாவின் லட்சியம் காமராஜர் ஆட்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், சக்தி வடிவேல், முனவர் பாஷா, துணைத் தலைவர்கள் ராமன், உடையப்பன், இளைஞரணி தலைவர் யுவராஜா, மகளிரணி தலைவி ராணி, மாணவரணி தலைவர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x