Published : 13 Feb 2024 05:06 AM
Last Updated : 13 Feb 2024 05:06 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மணவராயனேந்தலில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கி.பி.11-ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சு.ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ.சரத்ராம் ஆகியோர் திருச்சுழி பகுதியில் கள ஆய்வின்போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24-ம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதைக் கண்டறிந்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வே.ராஜகுரு கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குரண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையங்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்டஇடங்களில் சமண சமயம் பரவிஇருந்ததற்கான தடயங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன.
தற்போது, மணவராயனேந்தலில் கண்டறியப்பட்ட மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்தநிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இந்த சிற்பத்தில் மகரத்தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார்.
அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம். சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன்காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.
சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல்மக்கள் குடியிருப்பாக இந்த ஊர்இருந்துள்ளது. அதற்கு ஆதாரமாகஇவை உள்ளன. எனவே, இந்தசிற்பத்தை அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT