

மக்களவை துணை சபாநாயகர் பதவிவகிப்பது கூட ஆட்சியில் பங்குவகிப்பது போன்றதுதான் என மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
கரூர் மாவட்ட அனைத்து தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
கரூர் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ராஜு முன்னிலை வகித்தார். இதில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேசியதாவது: ‘தமிழகத்தில் கூட்டணியின்றி தனித்து ஒரு கட்சி 39 இடங்களில் போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றது இதுவே முதல்முறை. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முன்மாதிரி மாநிலமாகவும், நாட்டின் முதன்மை மாநிலமாகவும் தமிழகத்தை முதல்வர் ஜெயலலிதா மாற்றிக்காட்டுவார். மக்கள் அவர் பக்கம் உள்ளனர். அடுத்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்.
அகில இந்திய அளவில் சக்தி வாய்ந்தவராக முதல்வர் திகழ்கிறார். திறமை உள்ளவர், செல்வாக்கு மிக்கவர். அவர் மீது நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. ஆட்சியில் பங்கு வகிப்போம் என்றோம். மக்களவை துணை சபாநாயகர் பதவி என்பதுகூட ஆட்சியில் பங்கு வகிப்பது போன்றதுதான். காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியும் துணை சபாநாயகர் தேர்தலில் எதிர்த்து போட்டியிடவில்லை. புரோட்டோகால் வரிசையில் இப்பதவி 10-வது இடத்தில் உள்ளது.
அமைச்சர்களுக்கு அவர்கள் துறையில் மட்டுமே அதிகாரம். ஆனால், துணை சபாநாயகர் நாடு முழுவதும் செல்லலாம். மத்திய அமைச்சராக 98 முதல் 99-ம் ஆண்டு வரை இருந்த காலக்கட்டத்தில் கரூரில் நான்கு வழிச்சாலை, ரயில்வே மேம்பாலங்கள், ரயில் சேவை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டேன்.
அதுபோன்று கரூர் பகுதிக்கு தேவையானவற்றை பெற்றுத் தருவேன்’ என்றார். நிகழ்ச்சியில் ஆட்சியர் ச. ஜெயந்தி, கரூர் ஜவுளி பூங்கா தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, சட்டப்பேரவை முனனாள் உறுப்பினர்கள் ஏ.ஆர்.மலையப்பசாமி, வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.