Published : 21 Feb 2018 08:31 AM
Last Updated : 21 Feb 2018 08:31 AM

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடலாமா?: அரசியல் தலைவர்கள், சட்ட நிபுணர்கள் கருத்து

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா என்பது குறித்து அரசியல் தலைவர்கள், சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள் ளனர்.

‘லோக் பிரஹ்ரி’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களது சம்பளம் மற்றும் இதர படிகளை உயர்த்துவது குறித்து, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் தாங்களே முடிவு செய்கின்றனர். இது தவறு. இதுகுறித்து முடிவெடுக்க நிரந்தர நடைமுறையை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் சலமேஸ்வர், எஸ்.கே.கவுல் அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. லோக் பிரஹ்ரி அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.என்.சுக்லா ஆஜராகி,“எம்.பி.க்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக தனி நடைமுறையை உருவாக்குவது என 11 ஆண்டுகளுக்கு முன்பு மக்களவை தலைவர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை அதில் முன்னேற்றம் இல்லை” என்றார்.

அதற்கு மத்திய அரசு தரப்பில், ‘‘இது அரசின் கொள்கை முடிவு’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “எம்.பி., எம்எல்ஏக்களுக்கான ஊதியம், சலுகைகளை நிர்ணயம் செய்ய நிலையான, சுதந்திரமான ஒரு முறையை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். ஆனால், மத்திய அரசோ, ‘இது கொள்கை முடிவு. நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது’ என்கிறது. கொள்கை முடிவுகள் என்பது மத்திய அரசுக்கு மட்டுமேயான தனி உரிமை யாக இருக்க முடியாது. அதில் நீதிமன்றத்துக்கும் பங்கு இருக்க வேண் டும்’’ என்றனர்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை மார்ச் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

‘மாநில அரசுகளின் கொள்கை முடி வில் அரசு தலையிடக் கூடாது’ என்று உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் இந்த இருவேறு கருத்து கள் குறித்து அரசியல் தலைவர்கள், சட்ட நிபுணர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

பி.எஸ்.ஞானதேசிகன், தமாகா துணைத் தலைவர்: அரசியல் சட்டத்தின்படி நிர்வாகம், நீதித்துறை, நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவை தனித்தனி அமைப்புகள். அதில், ஒரு அமைப்பு மற்றொரு அமைப்பில் தலையிடக் கூடாது. இயற்றப்பட்ட சட்டங்கள் தவறு எனில் அதை நீக்க நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், நீதிமன்றங்களே சட்டத்தை உருவாக்கும் போக்கு அதிகமாகி வருகிறது. அது தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு அரசு ஆட்சிக்கு வரும்போதும் ஒரு கொள்கையை வகுக்கும். அந்த கொள்கையை நீதிமன்றம் கேள்வி கேட்டால் அரசாங்கம் நடத்த முடியாது.

பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.: நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் நிறைவேற்றித் தந்த சட்டங்களின்படி ஆட்சி நடைமுறை இருக்கிறதா என்று பார்ப்பது தான் நீதிமன்றங்களின் பணி. ஆனால், எந்த கொள்கை அடிப்படையில் ஆட்சி நடக்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை. நீதித்துறை, நிர்வாகம், நாடாளுமன்றம் ஆகியவை அவரவர் வரம்புக்குள் நின்று செயல்பட்டால் தான் அரசியல் சாசன சட்டத்தின் நோக்கம் சுமுகமாக நிறைவேறும். வரம்பு மீறி ஏதேனும் ஒரு அமைப்பு மற்றொன்றின் இடத்துக்குள் நுழைந்தால், மோதல் போக்குதான் ஏற்படும்.

ஆர்.எஸ்.பாரதி, திமுக அமைப்பு செயலாளர்: அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடி யாது என்று ஏற்கெனவே தெரிவித்த உச்ச நீதிமன்றம், தற்போது ‘ஏன் தலையிடக் கூடாது?’ என்று கேட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதில் எந்தத் தவறும் இல்லை. மக்களுக்காக சட்டங்கள் இயற்றப்படுவதுதான் முக்கியம். ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் மக்களே. மக்களுக்காக இயற்றப்படும் சட்டம் அவர்களுக்கு பயனில்லாத வகையில் அமைந்தால், அதில் நீதிமன்றம் தலையிடுவதில் எந்த தவறும் இல்லை.

சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் மத்திய அமைச்சர்: கொள்கை முடிவு என்பதே மக்களின் நலனுக்காக அர சால் எடுக்கப்படும் முடிவுதான். அதேநேரம், அரசு நிர்வாக ரீதியில் எடுக்கும் கொள்கை முடிவில் நீதிமன்றம் நிச்சயம் தலையிட முடியாது. நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் இந்த மூன்றும் அவரவர் அதிகாரங்களில் ஒருவருக்கு ஒருவர் தலையிட்டு எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மாறாக, அரசின் நிர்வாகரீதியிலான கொள்கை முடிவில் தலையிட்டு நீதிமன்றம் நேரடியாக கேள்வி எழுப்ப முடியாது என்றாலும், ‘இதை செய்யுங்கள், இதை செய்யாதீர்கள்’ என மத்திய அரசுக்கு பரிந்துரைக்கலாம். அதை ஏற்பதும், ஏற்காததும் மத்திய அரசின் முடிவு.

கே.எம்.விஜயன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்: ஒரு நலத்திட்டம் தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலை யிட முடியாது. ஆனால் ‘அந்த திட்டத்தின் பலன் எல்லா மக்களுக்கும் முழுமையாக சென்றடையவில்லை; மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது’ என தெரியவந்தால், அது கொள்கை முடிவானாலும், கேள்வி கேட்டு தலையிடும் உரிமை நீதிமன்றத்துக்கு உள்ளது. அரசின் கொள்கை முடிவு பெரிதா? நீதிமன்றத்தின் சட்ட முடிவு பெரிதா? என்ற கேள்வி எழும்போது, அரசின் அந்த கொள்கை முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகவோ, முன்பு வரையறுக்கப்பட்ட சட்டத்துக்கு முரணானதாகவோ இருந்தால் நீதிமன்றம் தலையிடுவதில் தவறு இல்லை.

ஏ.நாராயணன், சமூக ஆர்வலர்: கொள்கை முடிவு என்பது மக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக இருந்தால், ஒரு சார்பு நிலையைக் கொண்டிருந்தால் அதில் நீதிமன்றங்கள் கட்டாயம் தலையிட்டாக வேண்டும். ஆனால், அநாவசியமாக, அரசு செய்ய வேண்டிய விஷயங்களை நீதிமன்றங்களே கொண்டுவருவதும், அரசின் கொள்கை முடிவு விதிமீறல் இல்லாதபோதும், அடிப்படை உரிமைகளை மீறாத போதும் நீதிமன்றங்கள் அதில் தலையிடுவதும் தவறு.

இவ்வாறு அவர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x