

சேலம்: சேலம் மாவட்டத்தில் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் நிறமிகள் கலப்பு உள்ளதா என்பது குறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
சேலத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகள் மற்றும் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பொருளுக்கு அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளதா என்றும், அனுமதிக்கப்பட்ட நிறமிகள் அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.
சேலம் பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 8 உணவு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உணவு மாதிரி பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் பஞ்சு மிட்டாய் தயாரிப்பில் விதிமுறை மீறப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து மேல் நடவடிக்கை எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.