Published : 13 Feb 2024 06:10 AM
Last Updated : 13 Feb 2024 06:10 AM
கிருஷ்ணகிரி/ஓசூர்: ஓசூர், தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி வட்டாரங்களில் கர்நாடக மாநிலம் சென்று வந்தவர்களுக்குக் குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளதா என்பது தொடர்பாக சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடக மாநிலம் சிமோகா,உத்திரகனடா, சிக்மங்களூரு ஆகிய மாவட்டங்களில் 53 பேருக்கு அண்மையில் கியாசனூர் பாரஸ்ட்’ (குரங்கு காய்ச்சல்) நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நோயைப் பொறுத்தவரை காட்டில் வசிக்கும் வைரசால் பாதிக்கப்பட்ட குரங்குகளிடம் இருந்து பரவுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது அண்மையில் உயிரிழந்த குரங்குகளிடமிருந்து ஆடு மற்றும் மாடுகளுக்குப் பரவி அவ்வழியே மனிதர்களுக்கு இந்நோய் பரவும். மேலும், மனிதர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது.
இந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 3 முதல் 8 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைவலி, குளிர், உடல் வலி ஏற்படும். அதிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகு ரத்த அணுக்கள் குறையலாம். சிலருக்கு இது 2 வாரங்கள் வரை நீடிக்கும். பெரும்பாலானோர் இதிலிருந்து குணம் அடைந்து விடுவார்கள்.
சிலருக்கு 2-ம் முறை காய்ச்சல் தலைவலியுடன் உடல் நடுக்கம், பார்வை மங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, ஆடு,மாடு ஆகியவற்றிற்கு உன்னி பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி வட்டாரங்களில் கர்நாடக மாநிலம் சென்று வந்தவர்களுக்கு இந்நோய் அறிகுறி உள்ளதா என்பது தொடர்பாக சுகாதாரத்துறை, வருவாய்த் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், வன அலுவலர்கள் காட்டில் குரங்கு இறந்துள்ளதா என்பதையும், கால்நடைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கால்நடை பராமரிப்புத் துறையினரும் கண்காணிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT