

தமிழகத்தில் சுற்றுலாத் துறை உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.66 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என்று அத்துறையின் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கூறினார்.
சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து செவ்வாய்க்கிழமை அவர் பேசியதாவது:
சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான படகு குழாம்களை மேம்படுத்தும் வகையில் 81 புதிய படகுகள் ரூ.65 லட்சத்திலும், படகு குழாம்களில் உள்ள படகுகளுக்கு 32 புதிய அவுட்போர்டு மோட்டார்கள் ரூ.92 லட்சத்திலும் வாங்கப்படும். சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.1.7 கோடியில் 5 புதிய சொகுசுப் பேருந்துகள் வாங்கப்படும்.
ஸ்ரீரங்கத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ‘யாத்ரி நிவாஸ்’ அமைந்துள்ள பஞ்சக்கரை சாலையில் ரூ.75 லட்சம் செலவில் மின்விளக்கு வசதிகள் செய்து தரப்படும். திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயிலில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகள் அமைக்கப்படும். சுற்றுலாத் துறையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.66.86 கோடி யில் தயாரிக்கப்பட்டுள்ள 9 திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். சுற்றுலாத் தலங்களில் தூய்மையை வலி யுறுத்தியும் பாரம்பரிய வளங்கள் சேதமடைவதை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு பிரச் சாரம் ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு சுற்றுலாவின் வணிகச் சின்னத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் ‘பென் டிரைவ்’ மூலம் வெளியிடுவதற்கான குறும்படம், ரூ.10 லட்சத்தில் தயாரிக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ரூ.10 லட்சத்தில் சுகாதார வசதிகள் செய்து தரப்படும். வேலூர் மாவட்டம், திருப்பாற்கடலில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். ஏலகிரியில் உள்ள யாத்ரி நிவாஸ் கட்டிடம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ‘ஓட்டல் தமிழ்நாடு’ என மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.