

சென்னை: ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ்காவல் படை மையத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில், 191 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் எ. நாராயணசாமி வழங்கினார்.
நாடு முழுவதும் 12-வது வேலைவாய்ப்பு திருவிழா (ரோஜ்கார் மேளா) நேற்று நடைபெற்றது. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை மையத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு திருவிழாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் எ. நாராயணசாமி கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய ஆயுதக் காவல் படைகள், இந்தியக் கடலோரக் காவல் படை, பொதுத் துறை வங்கிகள், அஞ்சல் துறை, நிதித் துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் சேர 191 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய கவனம் செலுத்தி முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் வேலைவாய்ப்பு திருவிழாவை கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் தொடங்கி வைத்தார். இன்று 12-வது நிகழ்ச்சி நாடுமுழுவதும் 46 இடங்களில் நடைபெறுகிறது.
இந்த அரசு நாட்டிலுள்ள ஏழைகள், இளைஞர்கள், மகளிர் மற்றும் சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் என அனைவரின் நலனிலும் அக்கறையுடன் செயல்பட்டு அவர்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இளைஞர்களின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் ஸ்டார்ட்-அப் இந்தியா, ஸ்டாண்ட்-அப் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் அவர்கள் சுயமாகத் தொழில்தொடங்கி வேலை தேடுபவராக இல்லாமல் வேலை வழங்குபவராகச் சமுதாயத்தில் உயர வழி வகுத்துள்ளது. புதிதாக பணி நியமன ஆணைகள் பெறும் இளைஞர்கள் கர்மயோகி தளத்தில் சிறப்பு பயிற்சிகளைப் பெறுவார்கள். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.