Published : 13 Feb 2024 06:16 AM
Last Updated : 13 Feb 2024 06:16 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை அமைப்பதற்காக, அதிகத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 356 ஏக்கர் விவசாய நிலத்தை, 22 விவசாய குடும்பத்தினரிடம் இருந்து தொழிற்சாலை நிர்வாகம் பெற்றது.
நிலம் கொடுத்த குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் பணி வழங்கியது. இச்சூழலில், தொழிற்சாலை நிர்வாகம், பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்கு தொழிற்சாலையை விற்றது. தொழிற்சாலையின் புதிய நிர்வாகத்தினர், தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுதாரர்கள் 22 பேர் உட்பட 173 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 158 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவிவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா, ஏஐடியுசி மாநில துணை தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ். கண்ணன் உள்ளிட்ட 83 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT