Published : 13 Feb 2024 05:45 AM
Last Updated : 13 Feb 2024 05:45 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக வேளாண் பட்ஜெட் கருத்து கேட்புகூட்டம் நடைபெற்றது. இதில் கருத்து கேட்பு கூட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக தொடங்கி முடிக்கப்பட்டதால் விவசாயிகள் கருத்து தெரிவிக்காமல் அதிருப்தி அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் கடந்த10-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக விவசாயிகளுக்கு 4:30 மணி அளவில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே கூட்டம் தொடங்கப்பட்டு 4 மணிக்கு முடிக்கப்பட்டு விட்டது.
இதனால் பல விவசாயிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக உள்ள சில விவசாயிகளை மட்டும் அழைத்து விரைவாக கூட்டத்தை முடித்து விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து விவசாயி தனசேகரன் கூறியதாவது: விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும் தயாரிப்பது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே இந்த ஆண்டு தயாரிக்கப்படவுள்ள பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடம் கருத்து கூட்டம் காணொலிகாட்சி வாயிலாக செங்கல்பட்டு ஆட்சியர் வளாகத்தில் பிப்.10-ம்தேதி நடைபெறுகிறது.
இதற்காக விவசாயிகளுக்கு 4:30 மணி அளவில்அனைத்து விவசாயிகளும் இந்தகூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வேளாண் அதிகாரிகள் எங்களுக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தனர்.
அதன்படி மாவட்டத்தில் உள்ளபல்வேறு விவசாயிகள் 4 மணிக்கு கூட்டம் அரங்குக்கு வருகை தந்தனர். ஆனால், கூட்டம் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் இதனால் எங்களுக்கு பெரும்அதிர்ச்சியும், அதிருப்தியும் ஏற்பட்டது.
அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக செயல்படும் விவசாயிகள் மட்டும் அழைத்து இந்த கூட்டத்தை விரைவாக முடித்துவிட்டனர். காரணம் கேட்டால் முறையாகபதில் அளிக்க மறுக்கின்றனர்.
மாவட்டத்தில் பன்றி தொல்லை அதிகமாக உள்ளது, ஏரிகள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது, நிரந்தரகொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும், நிலத்தில் ட்ரோன்மூலம் மருந்து தெளிக்க வசதி ஏற்படுத்த வேண்டும், 100 நாள் வேலைதொழிலாளர்களை விவசாய தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
எனவே அரசு வரும் பட்ஜெட்டில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தேவையான அனைத்து தேவைகளையும்பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT