Published : 13 Feb 2024 06:10 AM
Last Updated : 13 Feb 2024 06:10 AM

மரபுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்: அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலே வெளியேறியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஆளுநர் உரையுடன் தொடங்கப்படும். அந்தவகையில் நேற்று தொடங்கப்பட்ட நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியகீதத்தை காரணம்காட்டி அவையில் இருந்து வெளியேறினார். இதற்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அவரை சட்டப்பேரவைக்கு அழைத்து வரும்போது தேசியகீதம் இசை வடிவில் ஒலிபரப்பப்பட்டு முறைப்படியே வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் மரபுக்குமாறாக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது தேசியகீதத்தையே அவமதிக்கும் செயலாகும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சட்டப்பேரவை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது தேசியகீதம் இசைக்கப்படுவதும்தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு. ஆனால் ஆளுநர் மரபுக்குஎதிராக தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்றுகூறி வெளியேறியுள்ளார். இது திட்டமிட்ட சதியாகும். ஆளுநரின் செயல்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

தி.க. தலைவர் கி.வீரமணி: தேசிய கீதம் என்பது நிகழ்வின் இறுதியில்தான் பாடப்படும். நிகழ்ச்சித் தொடக்கத்தில் மொழி வாழ்த்துஇசைப்பதே வழக்கம். இந்நிலையில் இதனை காரணம்காட்டி அவையிலிருந்து வெளியேறி ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையை அவமதித்துள்ளார். வேண்டுமென்றே உரையை புறக்கணித்திருக்கிறார். ஆளுநர் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழக மக்களை அவமதிக்கும் வகையிலும் சட்டப்பேரவையில் நடந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவியின்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆளுநர், தனது பொறுப்பை மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியை போலவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழகத்தில் இருந்தும் வெளியேற வேண்டும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடைபெறாத விஷயங்கள் இன்றைக்கு சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தமிழக மக்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவாக பார்க்கிறேன். ஆளுநரும், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் நகமும், சதையும்போல இணைந்து பயணித்தால்தான் நாட்டுக்கும், மக்களுக்கும் அது பயனளிக்கும். எதிரும் புதிருமாக செயல்பட்டால் பாதிக்கப்படுவது மக்களே.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மரபுகளுக்கு மாறாக தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மக்கள் பிரதிநிதிகளின் உணர்வுகளை புறக்கணித்துள்ளார். ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டுள்ளார். இதனை வண்மையாக கண்டிக்கிறோம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கும் வகையில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் வருத்தமளிக்கிறது. ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே நீடிக்கும் மோதல் போக்கு மாநிலத்துக்கு மட்டுமல்லாது மக்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும். இருதரப்பும் இனியாவது உணர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x